பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

55



இதன் இன்றியமையாமையைக் கருதிய திருவள்ளுவப் பேராசான், தாம் எடுத்துக்கொண்ட பிற பிற செய்திகளைப் பற்றியெல்லாம், ஓரதிகாரத்தின் பத்துக் குறள்களிலோ, இருபது அல்லது முப்பது குறள்களிலோ விளக்கிச் சென்றவர் நட்பைப் பற்றி மட்டும், நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, இகல் முதலிய ஆறு அதிகாரங்களில் வெளிப்படையாகவும், நேரடியாகவும், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ் சேராமை, பகைமாட்சி, பகைத் திறத்தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை முதலிய ஆறு அதிகாரங்களில் மறைமுகமாகவும், நுட்பமாகவும் விளக்கியதுடன் நில்லாமல் பெண்டிரொடு கொள்ளும் நட்பு பற்றி, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய இரண்டு அதிகாரங்களிலும், நண்பர்கள் வழியாகத்தான் ஒருவன் கட்குடியனாகவும், சூதாடியாகவும் ஆகின்றான் என்பதைத் தெளிந்து, கள்ளுண்ணாமை, சூது ஆகிய இரண்டு அதிகாரங்களிலும், இவற்றால் நோய்வாய்ப்பட்டவன் விடுபட மருத்துவர் நட்பை நாட வேண்டும் என்று கருதி மருந்து என்னும் ஓரதிகாரத்தையும் ஆக மொத்தம் பதினேழு அதிகாரங்களில், நூற்றெழுபது குறட்பாக்களில் அளாவியும் விளக்கிப் போந்ததுடன், நட்பு என்றொரு தனியியலையும் வகுத்துக் கூறினார் என்று அறிதல் வேண்டும். இவையன்றி அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றியறிதல், பிறனில் விழையாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, ஈகை முதலிய அதிகாரங்களிலும் நட்புச் செய்வானுக்கு இருக்க வேண்டிய பண்புகள், எதிர் நேரும் குறைகள் இவற்றை யெல்லாம் பொதுவாகவும் அதேபொழுது மிகமிக விளக்கமாகவும் கூறிய கருத்துகள் அனைத்தும் கவனிக்கப் பெற வேண்டியனவாகவும் சுட்டுகின்றார்.

8. வினைத் தொடர்புள்ள நட்பு

இனி, வினை செய்யப் புகுவானுக்கும் நட்பு துணையாக வேண்டியுள்ளது. இது பற்றி முன்னரே ஓரளவு கூறப்பெற்றது. வினை செய்யப் புகுவானுக்கு ஏற்படும் தட்பு வினைத் தொடர்புடையதாகத் தான் இருக்க முடியும். இருத்தல் வேண்டும். எனவேதான் அதை நட்பு என்று குறியாது, துணை என்று குறிப்பிடுவார் குறளார். திருக்குறளில் துணை என்ற சொல், அளவு என்னும் பொருளைத் தவிர, இரண்டு பெயர்களை மட்டுமே சுட்டும் சொல்லாக அமைந்துள்ளது. ஒன்று மனைவி, இரண்டு துணைவர். அஃதாவது வினைக்குத் துணையாக வரும் நண்பர். மனைவியைத் துணை என்றது, இல்லற வாழ்க்கையில் அவள் இறுதி வரையில் வர வேண்டியவள் என்பதற்காகவும், அவள் தன் வாழ்வில் பாதி உரிமை பெற்றவள் அடிமையல்லள் - என்பதற்காகவும், தன் இன்ப துன்பங்களில் அவள் ஒருத்திக்குத்தான் பகிர்ந்து கொள்ளும் பங்குண்டு என்பதைக் குறிக்க