பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

செயலும் செயல் திறனும்



நுட்பங்கள் அனைத்தும் விளங்கியிருக்கும் என்று கொள்ள முடியாது. எனவே, நாம் எல்லாவற்றையும் தெரிந்து விட்டோம் என்று நம்மை அளவுக்குமேல் மதித்துக் கொள்ளக் கூடாது.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

(438)

என்பது குறள் கூறும் அடக்க நிலை. ஒரு வினையால் நல்லது விளையுமா தீயது விளையுமா என்பது அவ்வினையில் ஈடுபட ஈடுபடத்தான் தெரியவரும். முழுவதும் முன்கூட்டியே உணர்ந்து கொள்வது கடினம். அடுத்து என்ன நடைபெறும் என்று அறிய முடியாத நாம், ஒரு வினைமுடிவில் என்ன நேரும் என்று அறிந்து விட்டதாகக் கருதுவது அறியாமை.

3. அறிதோறும் அறியாமை

எனவே, ஒரு வினைபற்றிய முழுமையான தொடக்க முடிவுகளை, ஏற்கனவே அவ்வினையறிந்தாரைக் கொண்டு தான் நாம் தெரிந்து கொள்ளமுடியும். அப்படித் தெரிந்து கொள்ளாமல் நாமே வினையில் ஈடுபட்டுத் தெரிந்து கொண்டுவிடலாமென்று நினைப்பது அறியாமை. அறியாமை என்பது அடுத்தடுத்து வரும். அறிய அறியத்தான் அது விளங்கும். 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்' (10) என்னும் தெளிவுரை அறிய அறியத்தான் அறியாமை தெரியும் என்று எச்சரிக்கின்றது. அறிவு நிலைகளிலேயே அறியாமை தொடரும் என்றால், வினைநிலைகளில் வரும் அறியாமயை முன்கூட்டியே உணர்தல் மிகக் கடினம். ஒரு மிதிவண்டியின் பாகங்களையோ, ஒரு கடிகாரத்தின் உறுப்புகளையோ ஒவ்வொன்றாக அடையாளம் வைத்துக்கொண்டு - நினைவு வைத்துக்கொண்டு - நாம் பிரித்தெடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அவற்றை மீண்டும் பழையபடி பூட்டிவிடுவது அவ்வளவு எளிதன்று. கழற்றிய பல திருகாணிகளை, எங்கே எந்த உறுப்பில் வைத்துப் பொருத்துவது என்பதில் நாம் திண்டாடும் பொழுதுதான் நம் அறியாமை நமக்கு விளங்கும். இனி எல்லா உறுப்புகளையும் ஆய்ந்து அவ்வவற்றின் இடங்களைத் தேடிக் கண்டு பொருத்திவிட்டாலும் ஏதோ ஒரு கோளாறால், வண்டியின் அல்லது கடிகாரத்தின் இயக்கம் சரிவர அமையாது போகும். அது, அவ்வாணிகளுள் சிலவற்றைத் தளர்த்தியும், இறுக்கியும் முடுக்காமல் போவதால் அல்லது முடுக்கி விடுவதால் வந்த இடையூறாகக் கூட இருக்கும். எஃது எதனால் நேர்ந்தது என்பதை நாமே பட்டறிந்து கண்டுகொள்வதைவிட, ஏற்கனவே அதுபற்றிக் கண்டறிந்த ஒருவரைக் கேட்டறிந்து கொள்வது எளிதானதாக அல்லது சிக்கனமானதாக இருக்கும். இஃது இதனால் வரும். இதை இப்படிச் செய்வதால், இந்த இடர்ப்பாடு வராது என்பதே பட்டறிவு என்பது. இவ்வறிவு நமக்குப்