பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செவ்வாழை

13

இரண்டு நாளையில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான்—பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது—பழம் தர வேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள் கரியனிடம்.

பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப்பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது—ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும்பகுதி. இதோ, இந்தச் செவ்வாழை நம்மக் கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது-எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது—இதுபோல நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா! உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம்-பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான். செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறி விட்டது அவன் மனதில். குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று.

செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, 'ஐயரிடம்' சொல்லி விட்டார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, 'பட்டி' தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக்-