பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

செவ்வாழை

நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன்—அழாதீங்க—இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கண்ணு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்" என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்.

செங்கோடன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்கு வர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான்—அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப்பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்...!


அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல—ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு...? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான்—எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள்—எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கறை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!

நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்னநடை நடந்து அழகுமுத்துவிஜயா அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.

நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக் கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.