பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை—பச்சை நாடன்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.

"சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்?—வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!" என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், "நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க—அதைக் கொண்டுகிட்டு வரலாம்" என்றான். "சரி" என்றார் பண்ணையார்.

செங்கோடனின் செவ்வாழைக் குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!

அதற்கு மரண ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்!

எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைக்காரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.

தெருவிலே, சுந்தரமும், செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று-நாக்குக் குழறிற்று—வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.

மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை—என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை-அவன் குழந்தைகளின்

9