பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓங்கி என்னை அடித்தான் அந்த ஆள். ஈனப் பிழைப்புக்காரா! என்னையா அடித்தாய், என்று கூவினேன். நானும் ஒரு அறை கொடுத்தேன். கும்பல் கூடிவிட்டது. ரோஷமும் நியாய புத்தியுமுள்ள யார்தான் என்னை ஆதரிக்கமாட்டார்கள் என்ற தைரியம் பிறந்தது. நான், அந்தத் தரகன் கரத்தைப் பிடித்துக்கொண்டு, "கேளுங்களய்யா! இந்த அனியாயத்தை. சரோஜா, ஆறணாவாம்! நடுவீதியிலே கூவுகிறான், தைரியமாக" என்று கூறினேன்.

"உனக்குத் தேவையில்லையானால், நீ போய்விடு. அவனை அடிப்பானேன்."

"உனக்கு அந்த விலை பிடிக்காவிட்டால், வாங்கவேண்டாம், போ. அடிக்கலாமா!”

"அனியாயம் என்றால் போய்க் கெவர்மெண்டைக் கேள். அதற்கு, இவனை அடிக்க எவ்வளவு தைரியமடா உனக்கு"

இத்தகைய சொல்லம்புகள், நாலா பக்கத்திலிருந்தும் பாய்ந்து வந்து என்னைத் தாக்கின. என் திகைப்புக்கு அளவேயில்லை. என்ன அனியாயம்! நடுத்தெருவில் நங்கையை விலை கூறிப் பிழைப்பவனுக்கு, இவ்வளவு ஆதரவா!' இது என்ன பட்டினம்! என்று எண்ணித் தத்தளித்தேன்.

அடிபட்ட ஆசாமி அழுகுரலுடன், "நானும், இந்த மார்க்கட்டிலே பத்து வருஷமாக உலவுகிறேன். ஒருவர் கூட என்னை நாயே என்று சொன்னது கிடையாது. என் போராத வேளை இந்தப் போக்கிரியிடம் இன்று அடிபட்டேன். சரக்கு வாங்க வருகிறான் என்று நினைத்தேன். உள்ள விலையைத் தான் கூறினேன். வீண் வம்பு பேசி, வலிச்சண்டைக்கு இழுத்து, அடித்தான்" என்று கூறினான்.

2

17