பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சை, பிறகு, தன் தீர்மானத்தின்படி கோயில்கள் முன்பு சென்று, கோவிந்தா! முகுந்தா! கோபாலா! இரகுராமா! பாண்டுரங்கா! பக்தவத்சலா! பரந்தாமா! என்று, பூஜித்து வரத்தொடங்கினான். கோயில்களிலே பூஜைக்காக வரும் 'பக்தர்கள்' இந்தப் பஞ்சையின் பஜனையை மதித்தார்களென்றா எண்ணுகிறீர்கள்? அவர்கள் மனதிலே எத்தனையோ விதமான குமுறல்! அவைகளைப்பற்றி ஆண்டவனிடம் முறையிட்டுப் பரிகாரம் கோரவும், கொந்தளிக்கும் மனதுக்கு நிம்மதி தேடவும், கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோபுர வாயிலிலேயே, குடல் வெளியே வரும் விதமாகவும் பகவந் நாமத்தைக் கூவிக்கொண்டிருப்பவனிடமா நிற்பர், அவன் குறை கேட்பர், உபகாரம் புரிவர்! உள்ளே சென்று, இலட்சார்ச்சனை புரிந்து, ஆபத்பாந்தவா! அனாதாட்சகா! என்று துதிக்கவேண்டாமோ?

"ஓ! என் பக்தர்களே! இங்கே, நீங்கள், ஏதேதோ குறை கூறிக் கோரிக்கொள்கிறீர்கள். அங்கே கோபுரவாயிலிலே கூவிக்கிடக்கிறானே, அவன் அஷ்ட ஐஸ்வரியம் கேட்கவில்லை, வியாபாரத்திலே அமோகமான இலாபம் கிடைக்கவேண்டுமென்று கேட்கவில்லை, மூத்த மகனுக்கு ஜெமீன்தாரர் வீட்டிலே பெண் கிடைக்கவேண்டுமென்று கேட்கவில்லை. அவன் கேட்பது அரைவயிற்றுக் கஞ்சி! அதைத் தீர்த்துவிட்டுப் பிறகு உங்களிடம் வருகிறேன்" என்று ஆண்டவன் கூறுகிறாரா? இல்லை! அவர் திகைத்து நிற்கிறார், வாய் திறக்க முடியாதபடி வியப்புடன் நிற்கிறார், ஆச்சரியத்தால், அவருடைய உடல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. அடடா! இந்தக் கபட வேடதாரி என்னை எவ்வளவு அழகாக அர்ச்சிக்கிறான்! எனக்கு அபிஷேகம் ஆராதனை என்று கூறிப் பொருள்

38