பக்கம்:சேக்கிழார்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12சேக்கிழார்


பெற்றனர். கற்களைக் கோவில்களாகக் குடைந்தனர். கற்களைப் பாறைகளாக உடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில்களைக் கட்டினர். அவர்கள் தமிழ் - வடமொழி என்னும் இரண்டு மொழிகளையும் வளர்த்தனர். சைவப் பெரியார்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியவர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமங்கை ஆழ்வார், தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார் வாழ்ந்த காலமும் பல்லவர் காலமே ஆகும்.

சோழ அரசர்

பல்லவர்க்குப் பிறகு சோழர் மீண்டும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்; காஞ்சியில் பெரிய அரண்மனையைக் கட்டினர்; தொண்டை நாட்டில் பல புதிய கோவில்களை எழுப்பினர்; பழையவற்றைப் புதுப்பித்தனர்; தமிழையும் வடமொழியையும் வளர்த்தனர்; வைத்திய சாலைகளை அமைத்தனர். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழன், அவன் மகன் இராஜேந்திர சோழன் முதலியவர் காலங்களில் தொண்டை நாட்டில் சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்தன. குடிகள் வாழ்வும் சிறந்து இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/14&oldid=492398" இலிருந்து மீள்விக்கப்பட்டது