பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 93 படைக்கப்பட்ட உயிர்களுள் மனித உயிர், பசுவின் உயிர் என்ற வேறுபாடு கற்பிப்பது அறியாமையாகும். எனவே, ஓர் உயிர் கொல்லப்பட்டது; கொன்றவன் ஒரு மனிதன்; கொல்லப்பட்ட உயிரை நினைத்து அதன் தாய் வருந்துகிறது. இதற்குத் தீர்வு யாது’ என்ற முறையில் மன்னன் மனம் ஆய்கிறது. கொல்லப்பட்ட உயிரை எழுப்பினால்தான் தாயின் வருத்தத்தைத் தணிக்க முடியும். ஆனால், இது நடைபெற முடியாத ஒரு செயலாகும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு அறச் சட்டம் என்ன விடை இறுக்கிறது? மனிதன் இயற்றிய சட்டத்திற்கும் அறச் சட்டத்திற்கும் மாறுபாடு காணப்பெற்றால் அந் நிலையில் எதனை ஏற்றுக் கொள்வது? முன் நிகழ்ச்சிக்கு (precedent) மதிப்புத் தருகிறது மனிதச் சட்டம். ஆனால், முன்னிகழ்ச்சி என்ற ஒன்று இல்லாதவிடத்து என் செய்வது? இதை ஒத்த நிகழ்ச்சி நடைபெற்றிருப்பின் அந்த அடிப்படையைக் கொண்டே மனிதச் சட்டம் இயற்றப்பெறுகிறது. பசுங்கன்று அரசகுமரன் தேர்க்காலில் பட்டு இறந்த நிகழ்ச்சி முன்னர் இல்லை எனினும் மனிதன் தவறுதலாகப் பசுவதை செய்த நிகழ்ச்சி உண்டு. அதற்குக் கழுவாய் என்ன என்று மனிதச் சட்டம் உண்டு. இதனை மனத்தில் கொண்டு அமைச்சர்கள் பேசுகின்றனர். இதோ சேக்கிழார் கூறுகிறார்: