பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுநீதி என்னும் வழிகாட்டி 101 பாடியது மிக ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு அவர் சொல்லிய கருத்துக்களாகும். தமிழர் அல்லாதவர்களும், வைதிக மார்க்கத்தைப் பரப்பியவர்களும் ஆகிய பல்லவர்கள் காலத்திலேயே, ரிக்வேதியும் அந்தணரும் ஆகிய திருஞானசம்பந்தர் ஒவ்வொரு பதிகத்திலும் தம் பெயரைத் தமிழொடு சேர்த்துப் பாடியுள்ளார். அவர் காலத்திலும், அவருக்கு ஒரளவு முற்பட்டும் வாழ்ந்த திருநாவுக்கரசர் புறச்சமயத்திலிருந்து சைவத்திற்கு மீண்டபொழுது எவ்விதப் பிராயச்சித்தமோ தீட்சையோ பெறவில்லை என்பதைச் சேக்கிழார் விரிவாகப் பாடியுள்ளார். பல்லவர் காலத்திலேயே தமிழகத்தில் நிகழ்ந்த இம்மாபெரும் புரட்சியை இராசராசன், இராசேந்திரன் முதலிய சோழர்கள் முற்றிலும் மறந்துவிட்டு, சதுரானன பண்டிதர் வலையில் சிக்குண்டது சேக்கிழாரின் அதிர்ச்சிக்குக் காரணம் ஆகும். அவர்கள் அறியாமையை நேரிடையாகச் சாடாமல், மனுநீதிச் சோழன் கதையில் இக்கருத்தை வெளியிடுகிறார். மனுநீதியில் சொல்லப்பட்டபடி, பசுக்கொலைக்குப் பிராயச் சித்தம் என்று கூறும் அமைச்சர்கள், இராசராசன் பரம்பரையின் முன்னோர்போலும். தமிழன் கண்ட அறத்தை, "பிறிதின் நோய் தன்நோய்போல்” போற்றும் அறத்தை வலியுறுத்த மனுநீதிச் சோழன் முன் நிற்கிறான்.