பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 19 தில்லைக் காட்சி : அனுபவ விளக்கம் நம்பி ஆரூரரின் தல வழிபாடுகளைப்பற்றிக் கூறவரும் சேக்கிழார், அவர் தில்லைக்குச் சென்று கூத்தனை வழிபட்டதைக் கூறவருகிறார். இப் பாடல்களை இயற்றிய சேக்கிழார் பெருமானும், அதே தில்லையில் கூத்தனின் எதிரே நின்று வழிபடும் பொழுது நான்கு நூற்றாண்டுகள் முற்பட்டு அவருடைய கற்பனை பறக்கிறது. தாம் நிற்கும் அதே இடத்தில் கூத்தனின் திருமுன்னர்ச், சுந்தரமூர்த்திகள் நின்ற காட்சியையும் அவர் வழிபட்ட முறையையும் கற்பனையில் காண வேண்டும் என்று கவிஞர்பிரான் நினைத்திருக்க வேண்டும். கூத்தன் அவ்விருப்பத்தை நிறைவேற்றினான். சேக்கிழார் நான்கு நூற்றாண்டுகள் முன்னே சென்று ஒரு காட்சியைக் காணுகிறார். மணவாளக் கோலத்துடன் நம்பி ஆரூரர் கூத்தனின் எதிரே நிற்பதைக் காண்கிறார். ஆரூரரின் கண்கள் திறந்துதான் உள்ளன. கண்ணில் இருந்து அருவி போல் நீர் பாய்கிறது. கூத்தனின் திருநடனத்தில் ஆரூரர் கண்கள் நிலைபெற்றவுடன் அவருடைய ஐந்து பொறிகளில், கண்கள் தவிர ஏனைய நான்கும் செயல் இழந்துவிட்டன. அவற்றை அடுத்து நிற்கும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்கில் சித்தமும், மனமும் கண்கள்மூலம் கண்ட காட்சியில் ஒருங்கிணைந்து விட்டன. எனவே, நான்கு கரணங்களில் சித்தமும், மனமும் கூத்தனின் ஆடல் அழகில் ஒரே நிலையில்