பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 123 வினா தோன்றுமன்றே! அதற்கு விளக்கம்தான் மூன்றாவது அடியாகும். "இந்து வாழ்சடையான் ஆடும் ஆனந்த எல்லைஇல் தனிப் பெருங்கூத்து”த் தான், ஆரூரரின் பேரின்ப வெள்ளத்திற்குக் காரணம். இவ்வளவு அழகாகவும், விரிவாகவும் ஆரூரர் பெற்ற அனுபவத்தைக் கூத்தனின் அருள் கொண்டு விளக்கிய சேக்கிழார் பெருமான், அடுத்துக் கூறுகின்ற மூன்று சொற்கள் நம் சிந்தனைக்குரியவை. வெள்ளம் என்று ஒன்று வரும்பொழுது அதில் சிக்குபவர்கள் இரு வகைப்படுவர். ஒருசாரார், வெள்ளத்துள் அமிழ்ந்து போவர். மற்றொருசாரார், அதில் திளைத்து மகிழ்வர். கவிஞர்பிரான், இவ்வாறு இந்த மூன்று சொற்களையும் சேர்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு. திளைத்து, மாறு இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்’ என்று நான்காவது அடியில் சேக்கிழார் பெருமான் கூற ஒரு வலுவான காரணம் உண்டு. மேலே கூறிய முறையில், பொறி புலன்கள், கரணங்கள், குணங்கள் என்பவை ஒருமுகப்பட்டுக் கூத்தனின் அருள் வெள்ளத்தில் மூழ்குபவர்கள் மீட்டு வருவதில்லை. அந்த நிரதிசய இன்பத்தில் மூழ்குபவர் திருவடி நீழலில் இடம்பெற்று விடுதலின், பிறவிக் கடலைக் கடந்து அங்கேயே நின்று விடுவர். ஆருரருக்கும். அவ்வாறு நடைபெற்று விட்டால், அவரை எதற்காக இவ்வுலகிற்கு இறைவன் அனுப்பினானோ, அச் செயல்கள் நடைபெறாமல் நின்றுவிடும் அல்லவா?