பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 155 என்று பாடுவதால், மருள்நீக்கியாரின் சமுதாயத் தொண்டு இள்மையிலேயே தொடங்கிவிட்டது என்பதை அறிகிறோம். 6ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஒஹோவென்று செல்வம் செழித்ததாகத் தெரியவில்லை. எனவே, சமுதாயத்திற்குத் தேவையான அறச்சாலைகளும், தண்ணீர்ப் பந்தலும் அமைத்தார். இன்று பெரிதாகப் பேசப்படும் சுற்றுச்சூழ்நிலைப் பாதுகாப்பு என்பது, மரங்கள் வளர்ப்பதன் அடிப்படையிலேயே பெரும் பகுதி அமைகின்றது என்பதை அறிந்த நமக்கு, மருள் நீக்கியார் அற்றை நாளில் செய்த சமுதாயத் தொண்டு வியப்பை அளிக்கிறது. தம் செல்வத்தை வேண்டுவாருக்கு அளிப்பதிலும் விருந்தினரை உபசரிப்பதிலும் செலவிட்ட அவர், பொதுத் தொண்டையும் மறக்கவில்லை. அதனையே முதலில் செய்தார் என்பதனைப் பின்வரும் பாடல் விளக்குகிறது. காவளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன - மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நானிலத்து உள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறை நின்றார். . (பெ. பு-1306)