பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 7 அறிவே தேவை இல்லை என்று பக்தி கூறுமேயானால், அது மூடபக்தி என்று கூறப்படும். எனவேதான், இறைவனைப்பற்றி அறிவு கொண்டு ஆராயாதே என்று முழுவதுமாகத் தடுக்காமல் 'அளவுக்கு விஞ்சி ஆராயாதே' என்ற கருத்தில் 'மிக்குச் சோதிக்க வேண்டா என்று கூறுகிறார், ஆளுடைய பிள்ளையார். இனி இவரை அடுத்து வந்த சுந்தரர் காலத்திலும் அவரை அடுத்து வந்த மணிவாசகர் காலத்திலும் பக்தி மார்க்கம் தனது உச்ச கட்டத்தை அடைந்தது என்பதை அறியலாம். ஏறத்தாழ இதே காலகட்டத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களும் தோன்றி, பக்தி மார்க்கத்தைப் பரப்பினர். இந்தப் பெரும்புயல் தமிழகத்தில் வீசிய பொழுது தமிழர் அல்லாத பல்லவர் ஆட்சிதான் தமிழகத்தின் பெரும்பகுதியில் இருந்துவந்தது. முந்தைய பல்லவர்கள் பக்தி இயக்கத்தால் ஓரளவு தாக்கப்பட்டார்கள் என்பதும் பிந்தைய பல்லவர்கள் பெரிதும் தாக்குண்டார்கள் என்பதும் உண்மைதான். ஞானசம்பந்தர் காலத்துக்குப் பின் வந்த இராஜசிம்மன் கைலாசநாதர் கோயில் கட்டியதும் கடைசியாக வந்த வைரமேகன் தேவாரப் பதிகம் பாடுபவர்களைத் திருத்தவத்துறை என்ற ஊரில் நியமித்து அவர்கட்கு நிபந்தம் வழங்கியதும் பக்தி இயக்கத்தின் தாக்கமே ஆகும்.