பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 159 இறைவன் அருள் கடைக் கூட்ட மறுபடியும் சைவத்திற்கே வந்து சேர்ந்தார். தம்மை வருத்திய சூலை நோயைத் - திருவதிகை வீரட்டனப் பெருமானைப் பாடித் தீர்த்துக் கொண்டார். கல்வியும் தொண்டும் நிறைவு தரவில்லை! மருள்நீக்கியாரின் வாழ்க்கையின் தொடக்கம், நிறைந்த கல்வியைப் பெறுவதிலும் மக்கள் தொண்டு செய்வதிலும் தொடங்கிற்று என்பதை முன்னர்க் கண்டோம். ஆனால், இந்தக் கல்வியும், மக்கள் தொண்டும் அவருக்கு மனநிறைவைத் தரவில்லை. இது ஏன் என்பதுபற்றிச் சிந்திப்பது இன்று நமக்குப் பயன் தருவதாகும். இவை இரண்டு மட்டும் இருக்கும் பொழுது அமைதி கிட்டவில்லை. அப்படியானால், எப்பொழுது இவர் அமைதி பெற்றார் என்று ஆராய்வது பொருத்தமுடையதாகும். தொடக்கத்தில் கல்வியும் தொண்டும் இருந்தாலும், இறைபக்தி அல்லது இறையன்பு அதில் இடம் பெறவில்லை. சூலை நோய்க்குப் பிறகு, இறையன்பு, முன்னர்க் கூறிய கல்வி, தொண்டு என்பவற்றுடன் சேர்ந்த பிறகு மன அமைதி பெற்றுவிட்டார் நாவரசப் பெருமான். தேவாரத்தால் நாம் அடையும் பயனைப்போலவே அவருடைய வாழ்க்கையும் அதில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் இன்றைக்கும் வருங்காலச் சமுதாயத்திற்கும் வழி காட்டுவனவாகும்.