பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 161 வங்கியின் நிர்வாக இயக்குநர் பிறருடைய பொருளை வங்கியில் சேமித்துவைத்து நிர்வகிப்பது போலவே, செல்வர்கள் எனப்படுபவர்கள் பிறருடைய உழைப்பால் வந்த செல்வத்தைச் சேகரித்துத் தம்மிடம் வைத்து, அதை நன்கு நிர்வகித்து, பிறருக்காகவே அச் செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும். இதனைத்தான் மகாத்மா தர்மகர்த்தாத் தத்துவம் என்று கூறினார். இருபதாம் நூற்றாண்டில், மகாத்மா கூறிய இதனை, அவருக்கு 1400 ஆண்டுகள் முன்னர் இத்தமிழகத்தில் வாழ்ந்த மருள்நீக்கியார் என்ற மேட்டுக்குடி மகனார் செயலில் செய்து காட்டினார். சோலைகள் வளர்த்தல், குளம் வெட்டுதல், சாலை அமைத்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல் என்பவை மருள்நீக்கியார் என்ற தர்மகர்த்தா பொதுநன்மைக்காகச் செய்த செயல்க ளாகும். இன்றைய செல்வர்கள், நாவரசரின் இளமை வாழ்க்கையை அறிந்து கடைப்பிடித்தால், உலகம் உய்ய வேறு எதுவும் தேவையில்லை. நாவரசர் இக்கொள்கையைப் புதிதாகக் கண்டறிந்தார் என்று கூறுவதும் சரியன்று. மிகப் பழைய புறநானூற்றில் செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புந பலவே’ (புறம்-189) என்ற அடிகள் தர்மகர்த்தாத் தத்துவத்தை விளக்கிக் கூறுவதைக் காணலாம். ஒரு தவறான முடிவும், உண்மை விளக்கமும் மருள்நீக்கியாரின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு பெருநிகழ்ச்சி, அவர் வேற்றுச் சமயம் புகுந்ததாகும்.