பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 165 வேண்டும். தமிழ்ச் சமணர்கள் கொல்லாமையைத் தம் உயிர்போல் போற்றுகின்றவர். அதனாலேயே இவர்களில் மாறுபட்டவர்கள் களப்பிரர் என்பதைக் குறிக்கவே, கொல்லாமை மறைந்துறையும் சமணர்’ என்று சேக்கிழார் இவர்களைக் குறிப்பிடுகிறார். நாவரசர் வாழ்க்கையின் இடைப்பகுதியில், மகேந்திரவர்மன் களப்பிரர் சூழ்ச்சியால் அவருக்குப் பல்வேறு விதமான கொடுமைகளைச் செய்தான். சுண்ணும்புக் காளவாயில் இடுதல், நஞ்சினை ஊட்டல், யானையால் தலையை இடறச் செய்தல், கல்லோடு கட்டிக் கடலில் இடுதல் ஆகிய கொடுஞ் செயல்களைத் தமிழ்ச் சமணர்கள் மனத்தால்கூட நினைந்து பார்க்கமாட்டார்கள். நாமார்க்கும் குடியல்லோம்’ என்றும், 'அஞ்சுவது யாதொன்று மில்லை, அஞ்சவருவதுமில்லை என்றும் பாடிய நாவரசர், மன்னன் இழைத்த இக்கொடுமைகளை எவ்வாறு எதிர்கொண்டார் என்று பார்த்தால், 20ஆம் நூற்றாண்டின் மகாத்மா வகுத்த அஹிம்சைப் போராட்டத்திற்கு நாவரசரே முன்னோடி ஆவார் என்பதை அறியமுடியும். இக்கொடுமைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டு ஒரு வார்த்தைக்கூட எதிர்த்துப் பேசாமல் நாவரசர் இருந்ததுமட்டும் அன்று, அவருடைய மனத்தில் இக்கொடுமை செய்பவர்கள்மாட்டு ஒரு கடுகளவு சினமோ, வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோகூட இருந்ததில்லை என்பதை அவர் பாடல்கள் மூலமாகவே அறிகிறோம்.