பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சேக்கிழார் தந்த செல்வம் பெருங்காப்பியம் தோன்றும் காலம் பெருங்காப்பியங்களின் தோற்றம்பற்றி ஆய்வு செய்த இலக்கியத் திறனாய்வாளார்கள் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டறிந்து கூறினார்கள். அவர்கள் கூறிய உண்மை, உலகின் எந்த மொழியில் காப்பியம் தோன்றினாலும் அத்தனை காப்பியங்கட்கும் பொதுவானதாகும். அப்படியானால் அவர்கள் கண்டு கூறிய உண்மை என்ன? ஒரு பெரிய வல்லரசு வீழ்ச்சி அடையப்போகின்ற காலகட்டத்திலோ, அல்லது ஒரு பெரிய வல்லரசு தோன்றப்போகின்ற காலத்திலோ தான் பெருங்காப்பியங்கள் அந்தந்த மொழிகளில் தோன்றுகின்றன. இவர்கள் கூற்று மிகப் பழமையான கிரேக்கம், லத்தீன் மொழிகளுக்கு மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஜெர்மானியம் ஆகிய மொழிக் காப்பியங்கட்கும் பொருந்துவதோடன்றி இந்நாட்டில் தோன்றிய மொழிக் காப்பியங்கட்கும் பொருந்துவ தாகும். இந்த உண்மையை மனத்துட் கொண்டு பார்த்தால், கம்பநாடன் காப்பியம், சேக்கிழார் காப்பியம் ஆகியவை எந்தக் காலகட்டத்தில் தோன்றின என்பதை அறிந்து கொள்ளலாம். பல்லவப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கம்பநாடன் காப்பியம் தோன்றுகிறது. ஒரு வல்லரசு வீழ்ந்தால் அந்த இடம் காலியாக இருக்கப்போவதில்லை. அந்த வீழ்ச்சியிலேயே மற்றோர் அரசின், அல்லது வல்லரசின் தோற்றம் துவங்கிவிடுகிறது. பல்லவர்கள் சரிந்து, அந்தச் சரிவிலேயே விஜயாலயன் சோழ