பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சேக்கிழார் தந்த செல்வம் கொள்ளவேண்டிய பகுதியாகும். ஒரு சிலரைப் பொறுத்தமட்டில் குறிக்கோள் வேறாகவும் தொண்டு தனியாகவும் இருக்கலாம். மகாத்மாவைப் பொறுத்த மட்டில் அவரது குறிக்கோள் நாட்டு விடுதலை என்பதாகும். அவர் செய்த மக்கட் தொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கு உரியதாகும். குறிக்கோள் வேறாகவும் தொண்டு வேறாகவும் இருப்பதில் தவறில்லை. ஆனால், நாவரசர்பெருமானைப் பொறுத்தமட்டில் அவர் குறிக்கோளும் மக்கள் தொண்டும் ஒன்றாகவே இணைந்து விட்டன என்பதை அவர் பாடல் மூலமே அறிய முடியும். "கிடப்பது' “என் கடன் பணி செய்து கிடப்பதே' (திருமுறை : 5-19-9) என்ற அவருடைய பாடல் வரிகள் அவர் வாழ்க்கையின் தாரக மந்திரமாக அமைந்து விட்டதைக் காணலாம். இந்த அடியின் கடைசியில் உள்ள கிடப்பதே என்ற சொல் ஆழ்ந்த சிந்தனைக் குரியதாகும். கிடப்பது என்ற சொல் தன்னிச்சை இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இருப்பதைக் குறிக்கும். வழியில் கல் கிடக்கிறது என்றால், அங்கே கிடக்க வேண்டும் என்ற எண்ணமோ அந்த இடத்தைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணமோ அந்தக் கல்லுக்கு இல்லை. அங்கே கிடப்பது ஒரு கல் என்று கூறவேண்டுமே தவிர, ஒரு மனிதன் வீழ்ந்து கிடந்தால் அந்நிகழ்ச்சியைக் குறிக்க அங்கே