பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சேக்கிழார் தந்த செல்வம் நல்லாறு தெரிந்து, உணரநம்பர் அருளமையினால், கொல்லாமை மறைந்து உறையும் அமண்சமயம் - குறுகுவாா. (பெ. பு-1307) என்று பாடுகிறார். நில்லாத உலகியல்பையும் நிலையாத வாழ்க்கை யையும் அன்றாடம் கண்டுகொண்டிருக்கின்ற கோடிக் கணக்கானவர்களில் எத்துணைப் பேர் அறத் துறக்கிறார்கள் என்று சிந்தித்தால், மருள் நீக்கியார் பெருமை அறியமுடியும். பெளத்தம், வைணவம், சாக்தம், சமணம் ஆகிய அனைத்தும் ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நன்கு நிலை பெற்றிருந்தன என்றால், சைவத்தை விட்டுப் பெளத்தத்தையோ சாக்தத்தையோ விட்டுவிட்டுச் சமணத்தில் ஏன் வாகீசர் ஈடுபட்டார் என்ற வினாவை எழுப்பினால், ஒர் உண்மை தெற்றெனப் புலப்படும். நிலையாமைபற்றியே அதிகம் சிந்தித்தார் ஆதலால் யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலையாமை ஆகியவற்றை அதிகம் அழுத்திக் கூறும் சமணம், மருள்நீக்கியாருக்கு உகந்த தாயிற்று. மேலும் கலைகள் பல கற்றவராதலால், எல்லாச் சமயங்களின் தத்துவங்களையும், கொள்கை களையும் ஒரளவு நன்கு அறிந்திருக்க வேண்டும். சமயங்களின் தத்துவங்களை, கொள்கைகளை அறிவு பூர்வமாக ஆய்ந்து அவற்றில் நல்லனவற்றை அறிதல் வேறு.