பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 201 கடவுள் நம்பிக்கை வழிபாட்டு முறை என்பதுபற்றி அடிக்கடி சிந்திக்கலாயினார். போர்வயின்சென்ற தலைவன், போர்புரியாத பொழுது தலைவியைப் பற்றி நினைந்துகொண்டு இருப்பதுபோல, புதிய சமயத்தின் அன்றாட அலுவல்களை முடித்த பிறகு பழைய நினைவுகள் மனத்தில் ஒயாது ஊசலாடின. அச் சமயத்தில் இருக்கும்பொழுது இச் சமயம் சிறந்தது போலக் காட்சி அளித்தது. எனவே, இங்கே வந்தார். இங்குள்ள முரண்பாட்டால் மனத்தளர்ச்சி ஏற்பட்டவுடன் அந்தப் பழைய சமயமே தேவலாம் என்ற எண்ணம் மனத்தில் ஊசலாடியது. அங்கிருந்த நாட்களில் தம் எண்ண ஓட்டங்களையும் செயல் முறைகளையும் அடிக்கடி சிந்திக்கலானார். எவ்வளவு முயன்றும் இளமையில் ஊறிய அப்பழக்க வழக்கங்களை எளிதில் ஒதுக்க முடியவில்லை. அதைத்தான் முதல் பதிகத்தின் இரண்டாவது, ஆறாவது பாடல்களில் வாகீசர் நினைவுகூர்கிறார். ஐந்தெழுத்தை ஜெபித்ததாகவோ, பூசனைகள் செய்ததாகவோ கூறவில்லை. சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்” என்பது முதலான அடிகளில் வரும் "மறந்தறியேன்” என்ற சொற்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அகமனத்தின் அடித்தளத்தில் ஒடிக்கொண் டிருக்கும் இந்தச் சிந்தனைகளை மறக்க முடியவில்லை என்பதே இப்பாடலின் பொருளாகும். இம்முறை தவிர, வேறு எம்முறையில் பொருள் செய்தாலும் நாவரசரை இழிவுபடுத்துவதாகவே முடியும்.