பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 223 புழக்கத்திலும் இல்லை. அதனால்தான் தண்ணிர்ப் பந்தலின் மேலே எழுதப்பெற்ற பெயரைக் கண்டு வியப்புற்றவராய், இதனை எழுதிய அப்பூதியாரைக் காண வேண்டும்’ என்று செல்கிறார். தம் பெருமை தாமறியா நாவரசர் பெருமான், இறைவனுக்கும் தமக்கும் மட்டுமே இப்பெயர் தெரியும். இதனைப் பிறர் அறிய வாய்ப்பில்லை என்று இதுவரை கருதியிருந்தார் ஆதலால், அப்பூதியாரைக் காண விரைகின்றார். அப்பரைக் கண்டவுடன் அந்த அந்தணச் சிகாமணி தம் வாயிலில் நிற்கும் சிவனடியார் தம் வாழ்வின் குறிக்கோளாகிய குரு என்று கருதவில்லை. அதற்கும் ஒரு காரணம் உண்டு. கல் மிதப்பில் கரை ஏறிய பெருமான், தம்முடைய வீட்டை நாடி வருதல் என்பது நினைக்க முடியாத ஒன்றாகும். எனவே தான், அப்பூதியார் இவரை வாக்கின் வேந்தர் என்று நினைக்கவே இல்லை. அதன்பிறகு நடந்ததைச் சேக்கிழார் அற்புதமாக அப்பூதி அடிகள் புராணத்தில் விவரிக்கின்றார். அப்பூதியாரைப் பார்த்துப் பெருமான் நீர் வைத்த தண்ணிர் பந்தலில் நூம்பேர் எழுதாதே, வேறொரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் சொல் என்று மிகச் சாதாரணமாகத்தான் கேட்டார். பிறர் யாரும் அறியாத பெயர் என்று பெருமான் நினைத்திருந்தமை யால்தான் வேறொரு பெயர் என்று கூறினார்.