பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் : 235 மற்றவர்கட்கும் பகிர்ந்து அளிப்பதே தருமத்தின் வழி நிற்றலாகும். மூன்றாவதாக உள்ளது, "வாய்மையினில் ஊனம் இல் சீர்” என்பதாகும். வாய்மை என்பது சத்தியம் என்ற வடசொல்லின் பொருளை உணர்த்தும் தமிழ்ச் சொல்லாகும். அன்றியும் வாயால் கூறப்படும் சொல்லையே இது குறிப்பதால் உண்மையின் வெளிப் பாடு என்ற பொருளைத் தரும். வாய்மை பேசுவதில் ஊனம் என்ற ஒன்று இருக்க முடியுமா என்ற ஐயம் சிலர் மனத்திலாவது எழுதல் கூடும். உண்மையைப் பேசுவது வாய்மை எனப்படும் என்றாலும், பேசப் படும் சொற்கள் உண்மையானவையாக இருப்பினும் கேட்போருக்கு மனவருத்தத்தை, நோவைத் தருவதாக இருத்தல் கூடாது. அதுவே ஊனம் இல்லாத வாய்மை ஆகும். நல்ல பண்புடையவர்கள்கூட மிகு பொருள் சேர்ந்தவுடன் பண்பிலிருந்து நீங்கி, யாவரையும் அலட்சியப்படுத்திக் கடுஞ்சொல் பேசுபவர்களாக மாறிவிடுவார்கள். அவர்கள் பேச்சில் உண்மை இருப்பதால், அதனை உலகம் ஏற்றுத் கொண்டாலும் இதை, இன்னும் சற்று இனிய சொற்களால் கூறியிருக்கலாமே என்று பலர் கூறும் படியாக மிகுபொருள் படைத்தவர்கள் நடந்து கொள்வதுண்டு. காரைக்கால் வணிகர்கள் இக் குற்றமும் இல்லாதவர்கள் என்பதை அறிவிக்கவே, ஊனம் இல் வாய்மை என்கிறார், கவிஞர்.