பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 சேக்கிழார் தந்த செல்வம் பயின்று என்ற வார்த்தைகளால் குறிக்கிறார். அந்த வயதில்கூட, அடியார்கள் வந்தால் தொழுது போற்றும் இயல்பைக் கொண்டிருந்தார். பெரிய புராணம் முழுவதையும் பார்த்தவர்கட்கு இந்த இரண்டடிகள் ஓரளவு புதுமையாக இருக்கும். திலகவதியார், மங்கையர்க் கரசியார்போன்ற பெண் களைப் பேசும்பொழுது கூடச் சேக்கிழார் இவ்வாறு வருணிக்கவில்லை. அப்படியானால், புனிதவதியாரை மட்டும் இவ்வாறு கூறக் காரணம் என்ன என்ற வினாவை எழுப்பினால், ஓர் உண்மை விளங்கும். சேக்கிழார் இதனைத் தம் கற்பனையிலிருந்து பாட வில்லை. அம்மையார் அருளிய அற்புதத் திரு வந்தாதியில் அவரே தம்மைப்பற்றிக் கூறிக்கொள்ளும் ஒரு பாடல் இருக்கிறது. பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்பது இடர். (திருமுறை :1-4-) அம்மையின் அகச்சான்றை வைத்தே கவிஞர் இவ்வாறு கூறுகிறார். இத்தகைய பண்புடன் வளரும் ஒரு குழந்தை, ஒரு பெருஞ்செல்வர் வீட்டில் ஒரே குழந்தையாக இருந்தது பெருவியப்பே ஆகும்.