பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 சேக்கிழார் தந்த செல்வம் மிகைப்புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான். (பெ. பு-1734) இந்த ஒரு பாடலில் தெய்வச் சேக்கிழார் பரம தத்தனை எடைபோட்டுவிடுகிறார். பெரு வணிகன் மகனாகிய அவன் இரவு பகல் எந்நேரமும் செல்வத்தை ஈட்டுவதிலேயே காலத்தைக் கழிக்கும் இயல்புடையவன். இத்திருமணத்தில் அவன் மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் புனிதவதியை மணந்ததற்காக அன்று அவன் மகிழ்ச்சி; மகளைக் கொடையாகக் கொடுத்ததைக் காட்டிலும் வரம்புஇல் தனத்தைப் (பெரும் பொருளை) பெற்றதனாலேயே மகிழ்ச்சி அடைந்தான் என்பதை மிக அற்புதமாக, மகள் கொடையைக் காட்டிலும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய வரம்பில்லாத தனத்தை மாமனார் கொடுத்தபிறகு, பரமதத்தன் இல்லறம் நடத்தத் தொடங்கினான் என்று பாடுகிறார். தமிழ்க் காப்பியங்களில் இரண்டு திருமணங்கள் பற்றி இத்தகைய ஒரு சூழ்நிலை பேசப்படுவதைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் வரும் கோவலன் கண்ணகி திருமணம் ஏறத்தாழ இதே வகையைச் சேர்ந்ததுதான் என்பதை இளங்கோவடிகள் இரட்டுற மொழிதலால் குறிக்கின்றார். திருமணச் செய்தியை யானைமேல் ஏறியிருந்து கூறினார்கள் என்ற பொருள் பட, மாநகர்க்கு ஈந்தார் மணம் என்று கூறுகிறார்.