பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 சேக்கிழார் தந்த செல்வம் இப்பாடலின் மூன்றாமடி சிந்திப்பதற்குரியது. இரண்டாவது பழத்தைப்பற்றிப், பரமதத்தன் இரண்டு வினாக்களைத் தொடுக்கிறான். 'இதை எங்குப் பெற்றாய்? என்ற முதல் வினாவிற்கும், இந்தப் பழத்தை உனக்கு யார் கொடுத்தார்? என்ற இரண்டாவது வினாவிற்கும் கடல் போன்ற வேறுபாடு இருப்பதைக் காணலாம். ஒரு கற்புடைய இல்லத்தரசியைப் பார்த்து இதை யார் கொடுத்தார் என்று கேட்பது அசம்பாவிதமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். இந்த வினாவைக் கேட்பவன், எழுபது வயதுக்கு மேற்பட்ட கிழவனாக இருந்து, அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட மனைவியைப் பார்த்து இவ்வாறு கேட்டால், அவ்வினாவில் விஷம் இல்லை. ஆனால், அம்மையார் இருபத்தைந்து வயதிற்கும் குறைவானவர் என்பதைச் சேக்கிழார் அவருக்குத் தரும் இரண்டு அடைமொழிகளால் விளக்கிவிடுகிறார். அவன் இரண்டாவது கேள்வியைக் கேட்டபொழுதுகூட அவர் மனத்திலும் முகத்திலும் எவ்விதச் சலனமும் இல்லை என்பதை "மொய்தரு பூங்குழல் மடவார்"(பெ. பு-1749) என்றும், வாசமலர்த் திரு அணையார்” (பெ. பு-750) என்று அடுத்த பாடலிலும் கவிஞர் கூறுவது, இக்கருத்தை வலியுறுத்தவே ஆகும்.