பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 சேக்கிழார் தந்த செல்வம் அகத்துறவும் வாழ்வும் காரைக்கால் அம்மையார் போன்ற ஒருவர், பரமதத்தன் போன்ற ஒருவனிடம் எப்படி வாழ முடிந்தது என்ற வினாவை எழுப்பினால், இக் காலத்தவர்களான நமக்கு ஒரு நல்ல விடை கிடைக்கும். அம்மையார் போன்றவர்கள், "பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம், காதல், சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’ (திருமுறை 14,1) என்று தாமே பாடுகிறார். ஆதலின் அந்த அக வாழ்க்கைக்கு இடையூறாக, புற வாழ்க்கையாகிய இல்வாழ்க்கை தடையாக நிற்கவில்லை என்பதை அறிகிறோம். இன்று துறவு என்பதைச் சரியாக புரிந்து கொள்ளாமல் ஆண்களாயினும், பெண்களாயினும் எல்லாவற்றையும் விட்டேன் என்று கூறிக் கல்லாடை தரிப்பதைச் சின்னமாகக் கொள்கின்றனர். அன்றைய தமிழகத்தில் இத்தகைய வேறுபாடு காட்டப்பட வில்லை. பெரியபுராணத்தில் வருகின்ற அடியார் கள் அனைவரும், "சித்தத்தைச் சிவன்பாலே வைத்த” மாபெரும் துறவிகளாவர். அவர்கள் பலரும் இல் வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்ந்தனர் என்பதும் பல குழந்தைகட்குப் பெற்றோராக இருந்தனர் என்பதும் அறியப்பட வேண்டியனவாகும். மனத்தை முழுவது மாக இறைவனிடம் ஒப்படைத்துவிட்டால், உடம்பைப்பற்றிய கவலை இல்லை. காரைக்கால் அம்மையார் வாழ்க்கை இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டாகும்.