பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சேக்கிழார் தந்த செல்வம் திருநீலகண்டரை வெருட்டியதால் இறைவன் என்ன பயனைப் பெற்றான்? பள்ளிச் சோதனை போலவா? பெரியபுராணத்தின் உட்கோளை புரிந்துகொள்ளாமல் பலர் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், இறைவன் அடியார்களைச் சோதனை செய்வதற்காக இவ்வாறு செய்தான்’ என்று கூறுவதையும் எழுதுவதையும் கண்டுள்ளோம், பாவம் ! தங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் ஆண்டு முடிவில் சோதனை செய்வது போலவே, இறைவனும் சோதனை செய்கிறான் என்கிறார்கள் இவர்கள். சோதனை செய்யும் நிலையில் இருப்பவன் இறைவனாக மாட்டான். பின்னர் ஏன் இவை நடைபெறுகின்றன. இரண்டு காரணங்களுக்காக இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒன்று, மாபெரும் தீரச் செயல்களைச் செய்த இந்த அடியார்களிடம் அவர்களையும் அறியாமல் ஏதோ ஒரு மாசு உள்ளே இருந்துகொண்டு அவர்களை வளரவிடாமல் செய்கிறது. இறுதியாக உள்ள அந்த மாசைப் போக்கத்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் இறைவன் அருளால் நிகழ்கின்றன. 'நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் என்று பழுத்த அனுபவ ஞானியாகிய நாவரசர் பெருமான் கூறுவது இங்கு நினையத் தக்கது. -