பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருநாளைப்போவார் தீக் குளித்தது o ஏன்? இருவருள் ஒருவர் சைவ சமயத்தில் மிகப் பெரிதும் போற்றப் படுகின்ற அறுபத்து மூன்று நாயன்மார்களுள் நந்தனாரும் ஒருவர் ஆவார். பெரியபுராணத்தில் வரும் அடியார்களுள் அரிசன குலத்தில் தோன்றியவர் இருவர் ஆவர். திருஞானசம்பந்தப் பெருமானிடம் யாழ் வாசிக்கும் பணியினை விரும்பி மேற் கொண்டிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஒருவர் ஆவர். அவருடைய வரலாற்றை நோக்கும் போது, பாணர் குலத்தில் பிறந்ததற்காக அவர் என்றுமே கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அதற்கேற்ப வேதநெறி தழைத்தோங்கத் தோன்றிய ஞானசம்பந்தப் பிள்ளையாரும் அவரை ஏற்றுக் கொண்டு தம்முடனேயே இருக்குமாறு பணித்தார் என்று வரலாறு பேசிச் செல்கிறது. அடுத்தபடியாக உள்ள அரிசனத் தொண்டர் நந்தனார் ஆவர். சோழ நாட்டில் சிதம்பரத்தை அடுத்துள்ள ஆதனூரில் தோன்றியவர் இப்பெரியார். இவருடைய வரலாறு நாம் அனைவரும் அறிந்த ஒன்றேயாம். பல தலங்கட்கும் சென்று புறவாயிலில் நின்றபடியே இறைவனைக் கண்டு வழிபட்டுவரும் இவர், ஒரு முறை தில்லை செல்ல விரும்பினார்.