பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 சேக்கிழார் தந்த செல்வம் அடியாருக்குத் தான் அருள் செய்ததை மற்றவர்களும் அறியவேண்டும் என்ற கருத்தினால்போலும் தில்லை வாழ் அந்தணர்களிடமும் கனவில் தோன்றி நந்தனாருக்கு எரி அமைத்துத் தருமாறு கட்டளை. இட்டு மறைந்தான். இறைவனால் கட்டளை இடப்பெற்ற அவர்கள், நந்தனாரின் பெருமையை அறிந்து, அவருக்குத் தீயமைத்துத் தரத் தமக்குத் தகுதியோ உரிமையோ இல்லை என்பதனையும் நன்கு உணர்ந்தனர். என்றாலும் இறைவன் கட்டளையை மீற அஞ்சித் தீ அமைத்துத் தரவேண்டி நந்தனாரிடம் சென்று இதோ பேசுகிறார்கள்: ‘ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம் வெய்யஅழல் அமைத்துஉமக்குத் தரவேண்டி’ எனவிளம்ப, நையும்மனத் திருத்தொண்டர் "நான் உய்ந்தேன்'எனத் தொழுதார் தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படிமொழிந்தார். (பெ. பு-1075) இதிலுள்ள சிறப்பைச் சற்று ஆராய வேண்டும். தில்லையில் வாழ்கின்ற அந்தணர்கள், தம்முடைய பிறப்பு இழிவானது என்று வருந்தும் நந்தனை, நோக்கி, ‘ஐயரே! என விளிக்கின்றார்கள். ‘ஐயரே' என்று அழைத்துவிட்டுப் பிறகு அவருக்குத் தீ அமைத்துத் தருகின்றோம் என்றால், அது பொருத்த மற்றதாகும். சாதியால் ஐயர்கள் ஆகிய அவர்கள்,