பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பகையார் , 377 என்ற சிறப்பினுள் சிறப்புப் பார்வையும் நிற்கின்ற வணிகருக்குத் தோன்றிவிடுகின்றன. இம்முறை ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவருக்கும் உரிய ஒன்றாகும். பொதுப்பார்வை தோன்றிய உடனேயே சிறப்புப்பார்வை உடனடியாக வந்துவிடும். மூன்றாவதாக உள்ள சிறப்பினுள் சிறப்புப் பார்வையும் ஒரே வினாடியில் தோன்றிவிடுவதாகும். இந்த மூன்றாவது பார்வையின் முடிவு, இவர் நமக்குத் தெரிந்தவர், இன்ன பெயருடையவர் என்ற முறையிலோ-நமக்கு முன்பின் தெரியாதவர் என்ற முறையிலோ இரண்டின் ஒன்றில் முடிந்துவிடும். ஆகவே, பொதுப்பார்வை, சிறப்புப்பார்வை, சிறப்பினுள் சிறப்புப் பார்வை ஆகிய மூன்றும் எத்தகையோருக்கும் நிகழும் என்பதை இதன்மூலம் அறிகின்றோம். புகார் நகரத்து வணிகரைப்பற்றிக் கூறவந்த சேக்கிழார் இந்த மனிதர் நம்போன்றவர்களிலிருந்து மாறுபட்டவர், பெரிதும் மாறுபட்டவர், முற்றிலும் மாறுபட்டவர் என்பதை நம் கருத்தில் பதிய வைக்கின்றார். அடியார்கள் யார் எனினும், என்றதனால் அடியார்கள் என்ற பொதுப்பார்வை தவிர, ஏனைய இரண்டு பார்வைகளும் இந்த வணிகரிடம் இல்லை என்பதைக் குறிக்கிறார் சேக்கிழார்.