பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 29 உரிய புற அடையாளங்கள்கூட அவர்கள்மேல் இருக்கலாம். மாறர் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படவில்லை. அவரைப் பொறுத்தவரை அவர்கள் அனைவரையும் 'ஐயர்தம் அன்பர்’ என்றே கொண்டார். சுருங்கக் கூறுமிடத்து, அனைத்தும் இறைவன் படைப்பு ஆதலால் எல்லா மக்களும் ஐயர் தம் அன்பர் என்று மாறர் சொல்வதில் தவறில்லை. 'ஐயர்தம் அன்பர் என்ற சொல்லுக்கு ஐயர் தம்முடைய என்ற 6ஆம் வேற்றுமைப் பொருள் பிரித்து இதுவரையில் கூறிவந்தோம். இனி அந்தத் தம் என்ற வேற்றுமை உருபை, ஐயரால் படைக்கப்பட்ட, கருணை செய்யப்பெற்ற அன்பர் என்ற மூன்றாம் வேற்றுமைப் பொருள் விரித்தால் மிகச் சிறந்த பொருளைக் காணை முடியும். தன்னால் படைக்கப் பட்ட எல்லா உயிர்களிடமும் இறைவன் சமமாகக் கருணை பாராட்டி உள்ளே உறைகின்றான் ஆதலால், அந்த உயிர்கள் அனைத்தும் அவனால் அன்பு செய்யப்பட்ட உயிர்களே ஆகும். எனவே, மாறர் அவர்களிடையே எவ்வித வேற்றுமையும் பாராட்டாமல், இன்முகம் காட்டி, இன்சொல் கூறி உபசரித்தார் என்ற நுணுக்கமான பொருளை, அடியார்கள் எல்லா மக்களிடமும் வேறுபாடு பாராட்டாமல் சமமாக அன்பு காட்டி உண்பித் தார்கள் என்ற கருத்தை அறிய முடிகிறது.