பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் - 47 தமிழ் வழக்கு வென்றது என்று கூறுவதால் தமிழ் வழக்கில் வேரூன்றி இருந்த பக்தி வழியும், கிரியைகள் முதலியவற்றில் ஈடுபாடு கொள்ளாமல் இறைவன் புகழ்பாடும் பாடல்கள் மூலமே அனைத்தையும் பெறலாம் என்ற தமிழ் வழக்கும் பிற வழக்குகளை வென்றன என்று சேக்கிழார் நிறுவுகிறார். சீர்காழியில் தோன்றிய ஒரு தெய்வக்குழந்தையால் இவை அனைத்தும் நடைபெற்றன என்று சேக்கிழார் பாடும் பொழுது அவருடைய வரலாற்றறிவை நாம் அறிய முடிகிறது. இதுகாறும் கூறியவற்றால் சேக்கிழாருடைய பெரியபுராணம் சைவ சமயத்தில் மக்களை ஈடு படுத்துவதற்காகமட்டும் தோன்றிய காப்பியம் அன்று என்பதை அறிதல் வேண்டும், குறிக்கோளற்றுத் திரிந்த தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பி அவர்கள் வாழ்க்கையில் குறிக்கோள், இறையன்பு, தொண்டு என்பவை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தவே இப் பெருங்காப்பியத்தை இயற்றினார், சேக்கிழார். நிலை குலைந்துபோயிருந்த தமிழ் நாடு, தமிழர், தமிழ் மொழி ஆகியவற்றை உரிய இடத்தில் நிறுவியவர் திருஞானசம்பந்தரே ஆவார் என்பதை உணர்ந்த சேக்கிழார், அந்த நன்றி உணர்ச்சிக்காகவே காப்பியத்தில் நான்கில் ஒரு பாகத்தை அப்பெருமானுக்கு வழங்கினார் என்பதை அறிய வேண்டும். -