பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் . 67 கூடச் சேக்கிழார் ஓரளவு மாறுபட்டு நிற்கின்றார். பெருநகரங்களை வருணிக்கும்பொழுது விண்ணை முட்டும் மாளிகை, ஆடல் பாடல் நிறைந்த தெருக்கள் என்று பாடுவதில் தவறில்லை. ஆனால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்கள் வாழும் பகுதியை வருணிக்கும் பகுதிகளில்கூடக் காப்பியக் கலைஞர்கள் உயர்வுநவிற்சி அணியைப் பயன்படுத்துவதைக் காணலாம். இதன் மறுதலையாக, மேட்டுக்குடி மக்கள், நடுத்தர வகுப்பினர், வறுமையில் வாழ்பவர் என்ற மூன்று வகையினரையும் பாட வேண்டிய சூழ்நிலை சேக்கிழாருக்கு இருந்தது. புகழ்ச்சோழ மன்னன் வாழ்ந்த உறையூர், கருவூர், நெடுமாறன் வாழ்ந்த மதுரை என்பவற்றை வருணிக்கையில் அந்நகரங்களை உயர்வுநவிற்சி அணியோடு வருணிப்பதைக் காணலாம். அமர்நீதியார், திருநீலகண்டர், ஏனாதி நாதர் என்ற நடுத்தர வகுப்பினரை வருணிக்கையில் அவரது பொருளாதார நிலையைத் தெளிவாக அறிந்துகொள்ளும் முறையில் பாடிச்செல்வதைக் காணலாம். ஓரளவு வறுமையில் வாழ்ந்த திருக்குறிப்புத் தொண்டர், அதிபத்தர், கணம் புல்லர், குங்கிலியக்கலயர் ஆகியோரைப்பற்றிக் கூறும் பொழுது வறுமைதான் என்றாலும் ஓரளவு தாங்கிக் கொள்ளக் கூடிய வறுமைநிலை வாழ்க்கை என்பதை அறிவுறுத்துகிறார்.