பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரின் தனித்துவம் - 71 வேண்டிய தேவை என்ன? மேலாகப் பார்ப்பவர்க்கு ஊரின் பல பகுதிகளையும் வருணித்தல் இயல்பே என்று தோன்றும். இவ்வாறு பல கவிஞர்கள் பாடியுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால், இப்புராணம் பாடியவர் தெய்வப்புலவர் சேக்கிழார் என்பதையும், தொண்டர்தம் பெருமை கூற வந்தவர் என்பதையும் மனத்துட் கொண்டு பார்த்தால் ஏதோ ஒன்றை நினைவூட்டவே சேக்கிழார் இவ்விரண்டு பகுதிகளையும் அடுத்தடுத்து வருணிக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும், வாழ்க்கையில் எவ்விதக் கவலையுமின்றி அனைத்துச் செல்வங் களையும் பெற்று வாழும் இம் மேட்டுக்குடி மக்கள் வேறு கவலையின்மையால் தம் பெருங்கவனத்தை இறைவனிடத்தும் இறைத் தொண்டிலும் செலுத்தும் வாய்ப்பும் வசதியும் பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. - இதனெதிராக அன்றாடம் வயிற்றுப் பாட்டைப் பார்ப்பதற்கேகூட நாள் முழுதும் உழைக்க வேண்டிய இன்றியமையாமை உடைய மக்கள் வாழும் சேரியில் முழுநேர இறையன்பர் நந்தனார் வாழ்கின்றார். இவ்விரண்டு பகுதிகளையும் வருணிப்பதன் மூலம் சமுதாயத்திற்கு ஒரு பாடம் புகட்டுகிறார் சேக்கிழார். இறைவனிடத்தில் அன்பு செலுத்துவதற்கும் இறைத் தொண்டு, மக்கள் தொண்டு. என்பவற்றில் ஈடுபடுவதற்கும் வாழ்க்கை வசதியோ செல்வமோ தேவையில்லை என்று கூறவருகிறார் சேக்கிழார்.