பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சேக்கிழார்

மகேந்திரவர்மன்.‘இவன் அப்பர் காலத்துப் பல்லவப் பேரரசன். இவன் முதலிற் சமணனாக இருந்தான் பிறகு சைவனாக மாறினான். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த வரலாற்றுப்புகழ்பெற்ற சமணர்,கோவிலையும் மடத்தையும் அழித்தான் அந்தச் சிதைவுகளைக் கண்டு திருவதிகையில் குணபர ஈச்வரம் கட்டினான் என்பது சேக்கிழார் கூற்று.

'குணபரன்' என்பது பல்லவ மகேந்திரவர்மனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்று. அவன்,சமணனாக இருந்து சைவனானதை அவன் வெட்டுவித்த திரிசிரபுரம் மலைக்கோவில் கல்வெட்டே உணர்த்துகிறது. திருப்பாதிரிப்புலியூருக்கு அண்மையில் திருவந்திப்புரம் செல்லும் பெரிய சாலை ஒரம் இடிந்து கிடக்கும் கட்டடச் சிதைவுகளும் அங்குள்ள சமண விக்கிரகமும் புகழ்பெற்ற பாடலிபுரத்துச் சமண மடத்தை நினைப்பூட்டுவனவாகும். திருவதிகையில் - பண்ணுருட்டியிலிருந்து பாதிரிப்புலியூர் செல்லும் பெரிய சாலையில் திருவதிகைப் காவல் நிலையத்திற்கு எதிரில் பழுதுபட்டுக் கிடக்கும் சிவன் கோவிலே குணபர ஈச்வரம் என்பது. மண்மேடிட்டுப் புதையுண்டு கிடந்த அக்கோவில் 30 ஆண்டுகட்கு முன்புதான் கண்டறியப்பட்டு, இன்றைய நிலையிற் காட்சி அளிக்கின்றது.

சிறுத்தொண்டர்.(1) 'இவர் மகாமாத்திரர் மரபில் வந்தவர் வைத்தியக்கலை, வடநூற்கலை, படைக்கலப் பயிற்சி முதலியவற்றிற் சிறந்த புலமை உடையவர். (2) தம் மன்னற்காகப் பல போர்களில் ஈடுபட்டவர் (3) தம் அரசன் பொருட்டு வாதாபியைத் தாக்கி அழித்தவர் (4) திருச்செங்காட்டங்குடியில் கணபதிச் சரத்துக் கடவுளுக்குத் தொண்டு செய்துவந்தவர்' என்பது சேக்கிழார் கூறும் குறிப்பாகும்.