பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்11

விளங்கினதை அறியலாம். காஞ்சிபுரம் சங்ககாலத்திற் ‘கச்சி’ எனப்பட்டது. “அப்பெருநகரம் தேரோடும் தெருக்களைக் கொண்டிருந்தது; பழங்குடிகளையும் மதிலையும் பெற்றிருந்தது” என்று பெரும் பாணஆற்றுப்படை கூறுகின்றது.

பல்லவர் காலம்: பல்லவர் தொண்டை நாட்டைக் கைப்பற்றி ஏறத்தாழ 600 ஆண்டுகள் (கி.பி. 300-900) ஆண்டனர். அவர்கள் காலத்தில் தொண்டை நாடு பல துறைகளிலும் சிறப்புற்றது. காஞ்சி பல்கலைத் துறைகளிற் பெயர் பெற்று விளங்கியது. பிறநாட்டு மாணவரும் விரும்பி வந்து கற்குமாறு காஞ்சி வடமொழிக் கல்லூரி கல்வியிற் சிறப்புற்று விளங்கியது. “கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர்” என்று திருநாவுக்கரசரும் தமது தேவாரத்திற் பாராட்டுவாராயினர். பல்லவர் நாட்டை வளப்படுத்தப் பல ஏரிகளை எடுப்பித்தனர்; பாலாற்றிருந்து பல கால்களைப் பெருக்கினர். அவர்கள் ஆட்சியில், தொண்டை நாட்டில் சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்தன.

பிற்காலச் சோழர் காலம்: பல்லவப் பெரு நாட்டிற்கு நடு நாயகமாக இருந்த தொண்டை நாடு, கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதித்த சோழனாற் கைப்பற்றப்பட்டுச் சோழப் பெருநாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அது முதல் தொண்டை நாடு ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் சோழர் ஆட்சியில் இருந்தது. சோழர் ஆட்சி வடக்கே கோதாவரி வரை பரவி இருந்த மையால் ஆந்திரப் பகுதியைக் கவனிக்கக் காஞ்சி ஒரு தலைநகரமாக இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. காஞ்சியில் அழகுக்கு இருப்பிடமான அரண்மனை ஒன்று ‘பொன் மாளிகை’ என்ற பெயருடன் இருந்தது. சோழர் ஆட்சியிலும் காஞ்சிமா நகரம் வடமொழிக் கல்விக்கு நிலைக்களமாக விளங்கியது.