பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 சேக்கிழார்

சுந்தரர் காலம்

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840-865), இவன், "கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின் பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன்,"- என்று சுந்தரரால் ஏத்தெடுக்கப்பெற்ற பெருமையுடைய சிவபக்தன் என்று அறிஞர் கருதுகின்றனர். இவன்.'சிவனை முழுதும் மறவாத சிந்தையன்'. இவன் திருவொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர், திரு நெய்த்தானம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் திருத்தொண்டு செய்தவன். இவன் விருதுப் பெயர்களுட் குமார மார்த்தாண்டன்' என்பது ஒன்று. இவன், அப்பெயரால் விளக்கொன்று செய்து திருவிடை மருதூர்க் கோவிலுக்கு அளித்தான். இவன் காலத்தில், திரு ஆதிரைநாள் பல இடங்களிற் கொண்டாடப்பட்டது. இவன் மனைவியான மாறன் பாவையார் என்பவள் சிறந்த சிவபக்தி உடையவள். அவள் பல கோவில்கட்குத் திருப்பணிகள் செய்தவள். இப்பல்லவ வேந்தன் காலத்துக் கல்வெட்டில்தான் திருக்கோவில்களில் திருப்பதிகம் ஓதப்பெற்ற செய்தி அறியக் கிடக்கிறது. சுந்தரர் இவனிடத்திற் கரைகடந்த அன்பு கொண்டவர் என்பதற்கு, இவனை ஒரு நாயனாராகக் கொண்டு மேற்காட்டிய அடிகளிற் பாராட்டினமையே சிறந்த சான்றாகும்.

சுந்தரர் தேவாரம். சுந்தரர் திருப்பதிகங்களால் அறியத் தக்க செய்திகள்.

1. பாடல்பெற்ற பல கோவில்களில் இசை வளர்க்கப்பட்டது.

‘இவன் கழர்சிங்கன் என்பதற்குரிய சான்றுகளை எனது"பெரிய புராண ஆராய்ச்சி” என்னும் விரிவான நூலிற் கண்டு கொள்க. Vide also. Dr.C. Minakshi's Administration & Social Life under the Pállavas', pp.299-304 * ,