பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 எஸ். எம். கமால் அவளது கண்களில் உலகத்தின் வேதனையெல்லாம் இணைந்து ஆழ்ந்து இருப்பது போல அவருக்குத் தோன்றியது. ஏதோ கற்பனை உலகில் இருந்து விழித்துக்கொண்டு திடுக்கிட்டவள் போல, "மகாராஜா, ராணியார் ஒரு குவளைப்பால் அருந்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நேற்று மாலையில் அரண்மனை வைத்தியர் வந்து நாடியைப் பார்த்துவிட்டு ராணியாரது நாக்கில் தடவுமாறு கொடுத்த சூரணத்தையும் வெளியே துப்பிவிட்டார்கள். அதன்பிறகு அவர்களது உடல் நிலைமை நன்றாக இல்லாததால் இரவு முழுவதும் வைத்தியர் கொடுத்த களிம்பையும் அவர்களது கால்களிலும் கைகளிலும் தடவிக்கொண்டு இருந்தேன். இன்று அதிகாலையில் அரைநாழியகை நேரம் மட்டும் உறங்கினார்கள்..." என்று கலாதேவி வருத்தம் நிறைந்த வார்த்தைகளில் சொன்னாள். இருவரையும் மாறிமாறிப் பார்த்த சேதுபதி மன்னருக்கு, என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறியதை அவரது கண்கள் பிரதிபலித்தன. சில நொடிகளுக்குப் பிறகு, "சேது" மன்னரது குரல் தழுதழுத்தது. இதற்கு பிறகும் இந்தக் காட்சியைக் காணச் சகிக்காதவராக ராணியார், "மகாராஜா இனிமேல் நான் எத்தனை நொடி நேரம் தங்களது பார்வையில் உயிரோடு இருப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை. தங்களது அன்பு மனைவி என்ற உன்னதமான அந்தஸ்துடன் தங்களிடமிருந்து விடைபெறுவதற்காக, இந்த நான்கு நாட்களும் தங்களது வரவுக்காக காத்து இருந்தேன். நழுவிக்கொண்டிருக்கும் உயிரை நிறுத்தி வைப்பதற்குப் படாத பாடுபட்டேன்." இதற்கு மேல் தொடர்ந்து பேசுவதற்கு சக்தியும் தெம்பும் இல்லாத ராணியார் சில நொடிகள் மெளனமாக இருந்தார். அவரது பேச்சைக் கேட்டுவிட்டு, கருகிவிட்ட பாகற்கொடி போலத் துவண்டு கிடந்த ராணியின் உடலைப் பார்த்த பொழுது, போர்களில் மரணக் காயம் பட்ட பொழுதுகட கலங்காத சேதுபதி மன்னரது மனம் பயத்தால் சிலிர்த்து நடுங்கியது.