பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 எஸ். எம. கமால் அவளது பேச்சு புகழ்ச்சியாக இருந்தாலும் அதில் உண்மையும் ஒட்டிக்கொண்டு இருப்பதை சேதுபதி மன்னர் உணர்ந்தார். அவர் அறியாத ஒருவித உணர்வு அவரது உள்ளத்தில் பரவி மெய்சிலிர்க்கச் செய்தது. மேலும் கலா தேவியின் பேச்சில், இடையிடையே "மகாராஜா", "மகாராஜா" என்று குறிப்பிடும் பொழுது, அதில் அடங்கிய பணிவும் பவ்யமும், மன்னரது இதயத்தை ஒரு புதிய உணர்விலான கொக்கியில் கோர்த்து இருப்பது போல் உணர்ந்தார், நாணத்தினால் சில வினாடிகள் மெளனமாக இருந்தார். பிறகு மன்னர் பேசினார். "கலா தேவி நமது பேச்சு எங்கேயோதடம்புரண்டு சென்றுவிட்டது. இப்பொழுது சொல்வதைக் கேள். திருமலை நாயக்கர் எனக்களித்த பரிசில்களில் ஒன்றான பொன்னாலான அம்பிகையை, இராமநாதபுரம் கோட்டையில் புரட்டாசி மர்தத்தில் ஸ்தாபித்து, மதுரையில் நடிப்பது போல நவராத்திரி விழாவினை கலைவிழாவாக நடத்த திட்டமிட்டுள்ளேன். மதுரை சமஸ்தான ராஜ நர்த்தகியான நீயும் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும்." "சமுகம் உத்தரவு. தங்களது அடிமை மதுரை சமஸ்தான சேவகி என்பதால், மதுரை மன்னரிடம் ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிடுங்கள். மகாராஜாவின் பேச்சுக்கு அங்கே மறுப்பு ஏது" "சரி சொல்லிவிடுகிறேன்" என்று பேச்சை முடித்த சேதுபதி மன்னர் கலா தேவியைக் கூர்ந்து நோக்கினார். அந்தப் பார்வையின் அழுத்தத்தை எதிர்நோக்கும் ஆற்றல் இல்லாதவளாகத் திணறிய அவள், ஒருவாறு சமாளித்துக்கொண்டு "பிறகு மகாராஜாதான் சொல்ல வேண்டும்" என்று சொல்லியவாறு முகத்தைக் கவிழ்த்துத் தரையை நோக்கினாள் யான் நோக்குங்கால் நிலன் நோக்கும் என்ற வள்ளுவரது வாக்கு உண்மையானது அல்லவா!