பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - சேதுபதி மன்னர் அவர்களது வழியினரான பக்ருதீன் ஒரு சிறந்த மெய்ஞானியாக வாழ்ந்து வந்தார். இந்த தர்ஹா அமைந்துள்ள அந்தப் பகுதி கி.பி.15ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி மிகப் பெரிய காடாக இருந்ததால் அந்த ஞானியின் ஆன்மீக வாழ்க்கைக்கு அந்த இடம் ஏற்றதாக இருந்து வந்தது. ஒரு சமயம் புதுக்கோட்டையிலிருந்து இராமேஸ்வரம் தல யாத்திரையாகச் சென்ற சில பிராமணப் பெண்மணிகளை அங்குள்ள கள்ளர்கள் வழி மறித்து அவர்களது அணிமணிகளைக் கொள்ளையிட்ட பொழுது அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஞானி பகுருத்தின் அந்தக் கள்ளர்களுக்கு நல்லுரை கூறி அந்த அபலைப் பெண்களைத் துன்புறுத்தாமல் விட்டுவிடும் படி அறிவுறுத்தினார். அவரது குறுக்கீட்டை விரும்பாத கள்ளர்கள் அவரைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டனர். இதே நேரத்தில் அந்த ஞானியரது ஆன்ம பலத்தினால் அந்த கள்ளர்களது கண்பார்வை பறிபோய்விட்டது. தங்களது தவற்றினுக்காக அந்த ஞானி வழங்கிய தண்டனையாக பார்வை இழப்பினை நீக்க அவரிடம் கள்ளர்கள் மன்னிப்பு கோரினர். அவரும் அவர்களில் ஒருவருக்கு மட்டும் கண்பார்வை கிடைக்குமாறு செய்து அவன் அந்த ஏழு பெண்களையும் பத்திரமாகக் கொண்டுபோய் சேதுப்பாதையில் விட்டு விட்டு வருமாறும் அவர் திரும்பி வந்த பிறகே எஞ்சிய கள்ளர்களுக்கு பார்வை கிடைக்கும் எனச் சொல்லி அந்த ஞானி முக்தி அடைந்தார். அவ்விதம் பார்வையினைத் திரும்பப் பெற்ற கள்ளர்கள் அந்த ஞானியை நல்லடக்கம் செய்தனர் என்பது வரலாறு. அந்த ஞானியின் அடக்கவிடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவில் இன்றும் அந்த கள்ளர் வழியினர் பயபக்தியுடன் விழாவில் கலந்து கொள்வது காணத்தக்கதாக உள்ளது. இத்தகைய மனிதநேயமிக்க மகான் ஒருவரது அடக்கவிடம் என்பதற்காக கிழவன் ரெகுநாத சேதுபதி மன்னரது மகன் ரணசிங்கத் தேவர் அந்த தர்ஹாவின் பராமரிப்பு செலவிற்காக வழங்கிய நிலக்கொட்ையை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.