பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 l இயல் 30 | முத்துப்பேட்டை தேவாலய கல்வெட்டு சேது நாட்டில் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பெரியபட்டினம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.16-ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டில் கடல் வாணிபத்திற்கு உதவிய மூன்று பெருந்துறைமுகங்களில் ஒன்றாகச் சிறந்து விளங்கியது. அப்பொழுது மன்னார் வளைகுடாவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட முத்துக்களின் சந்தையாக இந்த ஊரின் வடபகுதி அமைந்திருந்தது. இவ்விதம் முத்துக்கள் விற்பனை செய்யப்படும் இடம் இராமேஸ்வரத்திலும் மதுரையிலும் முத்துச்சாவடி என்றும் சோழ மண்டலக் கரையில் முத்துப்பேட்டை என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்தப் பகுதி பெரியபட்டினம் பொலிவு இழந்த நிலையில் முத்துப்பேட்டை என்ற தனி கிராமமாக உருவெடுத்துள்ளது.