பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

எஸ்.எம்.கமால்


மறக்குல மக்களின் மூத்தகுடியினரும், தங்கள் ஆட்சி அமைப்புகளை நிறுவினர். இராமபிரான் அமைத்ததாக கருதப்படும் புனித சேது அணையின் காவலர் என்ற பொருளில் மறவர் தலைவர்கள் “சேதுபதிகள்” என்றும், அவர்களது நாடு சேதுநாடு என்றும் குறிக்கப்பெற்று வந்தது.

செந்தமிழ்ப் புலவர்கள் இந்த மரபினரை

“மிக்க புகழ் சேர்க்கும் சிலை ராமன் சேது கண்ட முதலால்
காக்கும் தனுக்கோடிக் காவலன்” எனவும்,
“மனுக்கோடி காத்து மதுரையுங்காத்து வளருந்தெய்வத்
தனுக்கோடி காத்தவனே...” என்றும்,
“சூலம் கைக்கொண்ட இராமேசர் தாள்முடி சூடி எழு.
ஞாலம் கைக்கொண்ட ரகுநாயகன்...”
என பொன்னாங்கல் கவிராயரும்.
“சேட்கும் வழங்கும் புகழ்ச்சேதுகாவலன் செந்தமிழுக்கு,
நாட்கும் வழங்கும் பெருங்கொடையான்”

என மகாவித்வான் இராகவனாரும்[1] சேதுவேந்தர்களது தெய்வப் பணியையும் தண்ணளியையும் சிறப்பித்துள்ளனர். இன்னும் மூவாத்தமிழின் வளர்ச்சியில் முனைந்து நின்று, செந்தமிழ்க் கவி வாணர்களை அவர்கள் காத்து வளர்த்தவர்கள் என்பதை,

“அரசரில் உயர்ந்தவர் சேதுபதியாகும் அவர்
மணிவாயிலில் அகத்திய முனிவருக்கும் அதிகம் கற்ற பேர்கள் ஆயிரங்கவிவாணர் உண்டு, அவர்களில் நான் ஒருவன்”

என்று மிகுந்த தன் அடக்கத்துடன் சேரமன்னனிடம் தம்மையும், தமது சேதுபதி வேந்தரையும் அறிமுகம் செய்தவர் அசாதாரணக் கவிஞரான அட்டாவதானம் சரவணப் பெருமாட் கவிராயர்[2] ஆவார்.

இன்னும் இவை போன்ற சேதுமன்னர் பற்றிய ஏராளமான புகழ்ச்சிகள் கடந்த முன்னுறு ஆண்டுகளில் புலவர் பெரு மக்களது தனிப்பாடல்களாகவும், சிற்றிலக்கியங்களாகவும் தமிழ் கூறும் நல்லுலகில் வழங்கி வந்துள்ளன. இந்த மன்னர்களது


  1. மகாவித்வான், ரா. ராகவ ஐயங்கார் - ராஜ ராஜேஸ்வர சேதுபதி ஒரு துறைக் கோவை (1985) பாடல் 8
  2. அட்டாவதானம் சரவணப் பெருமாள் - கவிராயர் - பெருந்தொகை பாடல் எண் : 1790