பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

சேதுபதி மன்னர் வரலாறு

II திருமடங்கள்:

காலங்கள் தோறும் மக்களின் உள்ளங்களில் சமயப் பற்றை வளர்ப்பதற்காகச் சேதுநாட்டின் பல திருமடங்கள் இயங்கி வந்ததை வரலாற்றில் காணுகின்றோம். அவைகளில் குறிப்பாகச் சைவ சமய பிரச்சாரத்திற்காகத் திருவாவடுதுறை ஆதினமும் வைணவக் கொள்கைகளை விளக்குவதற்காக நாங்குநேரி ஜீயர் சுவாமிகள் மடமும் இயங்கி வந்ததை, இன்றும் இயங்கி வருவதைக் காண்கின்றோம்.

மேலும் பல சிறிய மடங்கள் சேதுநாட்டில் இயங்கி வந்ததை ஆவணப் பதிவுகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இந்தப் பதிவுகளின்படி அப்பொழுது 22 திருமடங்கள் இயங்கி வந்தன என்பது தெரிய வருகின்றது. இவைகளில் ஒரே ஒரு மடம் நீங்கலாக 20 திருமடங்கள் சைவ சமயத்தைச் சார்ந்தனவாக இருந்தன. பரமக்குடி வட்டத்திலுள்ள பண்டரி நாதர் மடம் என்ற அமைப்பு மட்டும் வைணவர்களால் நடத்தப்பட்டு வந்தது.

இந்தத் திருமடங்களில் பெரும்பாலும் வழிப் போக்கர்களுக்கும் பயணிகளுக்கும் நீரும் மோரும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திருப்பெருந்துறையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் நாள்தோறும் மகேசுவர பூஜை நடத்தப்பட்டுப் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த அறச்செயல்கள் என்றும் நிலைத்து நடைபெற வேண்டும் என்பதற்காகச் சேதுமன்னர்கள் இந்த 22 மடங்களுக்கு 41 ஊர்களை சர்வ மானியமாக தானம் வழங்கி இருந்தனர். அந்த மடங்களின் பெயர்களும் அவைகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்களின் பெயர்களும் பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆவணப் பதிவேடுகளின்படி


சேதுபதி மன்னர்கள் கொடைகளின் விவரம்
வழங்கிய நிலக் கொடைகளின் விவரம்
திருமடங்களுக்கு
தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I. தளவாய் சேதுபதி

1. மாசிலாமணி பண்டார மடம், இராமேஸ்வரம்

புளியங்குடி சகம் 1553 (கி.பி.1631) பிரஜோர்பதி தை 15