பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சேதுபதி மன்னர் வரலாறு

குடும்பங்களுக்கும் சலுகைகள் வழங்கியதை மேலப்பனையூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.[1]

இந்த மன்னர்கள் கானாட்டில் திருமெய்யம் பகுதியில் முதலில் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நிலைத்திருந்ததை உறுதிப்படுத்தும் சில சான்றுகள் அண்மையில் கிடைத்துள்ளன. முதலாவதாக, திருமெய்யம் குன்றின் அடிப்பகுதியில் அரண் ஒன்றினை கி.பி. 1120ல் விஜயரகுநாத முத்து வயிரிய முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் இந்தக் குன்றின் மேல் பகுதியில் கி.பி. 1195-ல் முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் அமைத்தனர் என தமக்குக் கிடைத்துள்ள இரு செப்பேடுகளின் ஆதாரத்தைக் கொண்டு கி.பி. 1882-ல் திருமெய்யம் தாசில்தார் புதுக்கோட்டை தர்பாருக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளார்.[2]

மேலும் கி.பி. 1909ல் தயாரிக்கப்பட்ட ஸ்டாட்டிஸ்டிகல் அக்கவுண்ட் ஆப் புதுக்கோட்டை என்ற அறிக்கையின்படி தற்பொழுதைய திருமெய்யம் கோட்டையின் கிழக்கு - வடக்குப் பகுதிகளை 20 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கட்சுவர்களால் இராமநாதபுரம் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1676 ல் அமைத்தார் என்ற செய்தி காணப்படுகிறது.

பாண்டிய நாட்டில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை சோழர்களது ஆட்சி தொடர்ந்து வந்ததும் அதனை அடுத்து கி.பி. 1311 முதல் 1378 வரை டில்லி சுல்த்தான்களது ஆட்சியும், அதனைத் தொடர்ந்து விசயநகர மன்னர்களது மகாமண்டலேசுரர்களது நிர்வாகமும் நடைபெற்று வந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சோழர்களது தானைத் தலைவர்களாக இருந்த செம்பி நாட்டு மறவர்கள் தம்மைத் தன்னாட்சி மன்னர்களாக அறிவித்து, ஆட்சியாளர்களாக மாறினர் என்பதுதான் பொருத்தமான வரலாற்று ஊகமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக வானாதிராயர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வது இங்கு ஏற்புடையதாகும். வாணர்கள் என்றும் பின்னர் வாணாதிராயர்கள் என்றும் வழங்கப்பெற்ற பேராற்றல்மிக்க இனத்தவர்கள் பாண்டியர்கள், சோழர்கள். நாயக்கர்கள் ஆட்சிக் காலங்களில் அவர்களது நிர்வாகத் தலைவராகவும். படைத்தளபதிகளாகவும் இருந்து 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நிலவிய உறுதியற்ற அரசியல் நிலைமைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அழகர்கோவில்,


  1. புலவர் சே.ராசு சேதுபதி செப்பேடுகள் (1995) - பக்கங்கள்
  2. Pudukkottai Durbar Records R.Dis. No: 9/1882 Quoted by Prof. K.V. Viswanathan in his M.phil., Thesis (1980)