பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயல் II

போகலூரில் வாழ்ந்த சேதுபதிகள்

I உடையான் ரெகுநாத சேதுபதி (எ)
சடைக்கன் - I

(1601 – 1622)

தமிழக வரலாற்றில் குறிப்பாகச் சேதுபதி மன்னர்களது வரலாறு பதினேழாவது நூற்றாண்டிலிருந்து முரண்பாடுகள் இல்லாத வகையில் தொடக்கம் பெறுவதுடன் இந்த மன்னர்களது தெய்வீகத் திருப்பணிகள் தொடர்வதனால் அவரது ஆட்சிக்காலம் சிறப்புப் பெறுகிறது.

இதற்கு முன்னிருந்த சேது மன்னர்களைப் பற்றிய சரியான தொடர்பான ஆவணங்கள் கிடைக்கவில்லை. போகலூரில் வாழ்ந்த சேதுபதி மன்னர்களின் வரிசையில் முதல் மன்னராக அறிமுகமாகும் சடைக்கன் சேதுபதிக்கும், மதுரை நாயக்கப் பேரரசிற்கும் நெருங்கிய தொடர்பு நிலவிவந்ததால் இந்த மன்னரைப் பற்றிய செய்திகள் வரலாற்றில் தெளிவாகப் பதிவு பெற்றுள்ளன.

இந்த மன்னர் கி.பி. 1601 முதல் கி.பி. 1622 வரை ஆட்சி புரிந்திருக்க வேண்டும். ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த மன்னரது ஆட்சித் தொடக்கம் கி.பி. 1603 என வரைந்துள்ளனர். இந்த மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும் அவர் சேதுபதிப் பட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை. இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடைகள் பற்றிய கி.பி. 1607ஆம் ஆண்டு செப்பேட்டின்படி இவரது இயற்பெயர் திருமலை சடைக்கன் என்றும், உடையான் ரகுநாத சேதுபதி காத்தத்தேவர் என்றும் தெரியவருகிறது. சூரியகுலத்தவரான ரெகுநாத சேதுபதி என்பது இராமபிரானைப் பின் பற்றுபவர்கள் என்றும், காத்தத்தேவர் என்பது சேது அணைக்குக் காவலர் என்ற பொருளில் அனைத்து சேதுபதி மன்னர்களுக்கும் ஆட்சிப்பெயராக அமைத்து வழங்கப்பட்டுள்ளது உடையான் என்பது சிவபெருமானது அடியாரைக் குறிக்கும் சொல்