பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சேதுபதி மன்னர் வரலாறு

இந்த நாட்டின் ஊடே பரவி ஒடுகின்ற கிருதுமால் ஆறு, குண்டாறு, வைகை ஆறு, மணி முத்து ஆறு, விரிசிலை ஆறு ஆகிய ஐந்து ஆறுகளில் வரப்பெறுகின்ற மழைவெள்ளம் இந்த நாட்டு விவசாயத்திற்கு அச்சாக அமைந்திருந்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே வரத்துக்கால்களையும் தான்போகிக்கால்களையும் குளக்கால்களையும் அமைத்ததுடன் அவைகளைக் கண்மாய், ஏந்தல், குளம், குட்டை ஆகியவைகளை அமைத்து அவைகளில் மேலே குறிப்பிட்டுள்ள ஆறுகளின் வெள்ளத்தைத் தேக்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்த சேதுமன்னரது ஆட்சியில் மேலும் சில நீர் ஆதாரங்களை இந்த மன்னர் அமைத்து உதவினார் என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.

சமுதாயப் பணிகள்

வைகை ஆற்றின் தென்பகுதி பெரும்பாலும் பார்த்திபனூருக்கு அப்பால் பரமக்குடி, முதுகளத்துார் வட்டங்களில் வறண்ட நிலங்கள் மிகுதியாக இருந்து வந்தன. இந்தக் கன்னி நிலங்களை வளமை கொழிக்கும் கழனிகளாக மாற்றுவதற்கு இந்த மன்னர் முயன்றார். கமுதக்குடி கிராமத்திற்கு மேற்கே கிழக்கு நோக்கிச் செல்லும் வைகை ஆற்றை வழிமறித்துத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு ஒரு பெரிய காலினை இந்த மன்னர் வெட்டுவித்தார். இதில் வரப்பெறுகின்ற வெள்ளத்தைப் பயன்படுத்திப்பல புதிய கண்மாய்களும், ஏந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வறண்ட நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக இந்த மன்னர் மறைந்து 300 ஆண்டுகளுக்கு அப்புறமும் இந்தக் கால்வாய் கூத்தன் கால் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு மக்களது பயன்பாட்டில் இன்றுவரை இருந்து வருகிறது.

இந்த மன்னரது இந்த முன்னோடி முயற்சி பிற்காலச் சேதுபதி மன்னர்களுக்கு வேளாண்மைத் துறையில் வழிகாட்டியாக அமைந்துவிட்டது. ரெகுநாத சேதுபதி மன்னர் குண்டாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகள் பயன்பட, நாராயணகாவேரி என்ற கால்வாயையும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் அதே குண்டாற்றின் கிழக்குப் பகுதியில் ரெகுநாத காவேரி என்ற மிக நீண்ட கால்வாயினைத் தோற்றுவிப்பதற்கும் கூத்தன் கால்வாய் சிறந்த முன்னோடி முயற்சியாக அமைந்தது. மேலும் இந்த மன்னர் வைகை ஆற்றின் வடபுறம் குளத்தூர் அருகே அமைந்துள்ள முதலூர் என்ற ஊரில் ஒரு கண்மாயை வெட்டிக் கலுங்குகளை ஏற்படுத்தினார் என்பதை அவரது கி.பி. 1628 ஆம் வருடத்திய கல்வெட்டு தெரிவிக்கின்றது.[1]


  1. கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)