பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். எம். கமால்

25

ஆன்மீகப் பணிகள்

இவ்விதம் சேதுநாட்டின் சமுதாயப் பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டிய இந்த சேதுபதி மன்னர் தமது தந்தையின் பணிகளை அடியொற்றி இராமேஸ்வரம் திருக்கோயிலில் பல புதிய திருப்பணிகளை மேற்கொண்டார். இந்தத் திருக்கோயிலின் முதல் சுற்றுப் பிரகாரத்தை இந்த மன்னர்தான் அமைத்திருக்க வேண்டும் என நம்புவதற்கு ஏற்ற ஆதாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரச் சுவற்றினை ஒட்டி மகாமண்டபம் ஒன்றினை இவர் நிர்மாணித்ததுடன் அந்த மதிலின் தென்பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறிய கோயிலையும் அமைத்துள்ளார். மேலும் இந்தக் கோயிலின் நடமாளிகையையும் இந்த மன்னரே அமைத்தார் என்பதனைக் கல்வெட்டுச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அடுத்து மன்னர் கூத்தன் சேதுபதியின் பார்வை இராமேஸ்வரம் திருக்கோயிலின் நிர்வாகத்தில் படிந்து நின்றது. திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் அவர்களுக்குரிய பணி, அவைகளைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் அதற்குக் கோயிலில் இருந்து வழங்கப்படும் பரிசு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்து அவர்களிடம் இசைவு முறி ஒன்றினை எழுதி வாங்கினார். மற்றும் திருக்கோயிலின் ஆதினக் கர்த்தராகிய சேதுராமநாத பண்டாரம் கோயிலில் வரப்பெறுகின்ற வருவாய்களை எவ்விதம் பிரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்க உரையையும் அந்தப் பண்டாரத்திடமிருந்து எழுதிப்பெற்ற செப்பேட்டின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன் அவரது நிர்வாகத்திறனையும் அறிவிக்கும் சிறந்த தடயமாக அந்தச் செப்பேடு அமைந்துள்ளது.

மேலும் இந்தச் செப்பேட்டில் தந்துள்ள வாசகத்தின்படி இந்த மன்னரது மனச்சான்று எவ்விதம் இருந்தது என்பதனையும் அறிய முடிகிறது. இந்த மன்னரது உத்தரவுப்படி இராமேஸ்வரம் திருக்கோயிலில் இரண்டு வகையான கட்டளைகள் இருந்து வந்தன. திருக்கோயிலுக்கு வரப்பெறுகின்ற அன்பளிப்புகள், காணிக்கைகள், நேர்ச்சை ஆகிய அனைத்து வருவாய்களையும் பொன், வெள்ளி அணிகளையும் கோயில் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதுடன், அவை தவிர சேது மன்னர்கள் உடையான் சடைக்கன் சேதுபதி காலம் முதல் சேது மன்னர்கள் வழங்குகின்ற சொந்தத் திரவியங்களும் அணிமணிகளும் மட்டும் தனியாகச் சேது மன்னர் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதும் அந்த உத்தரவு. இதற்கான காரணத்தை விளக்கம் தருகின்ற அந்தச் செப்பேட்டின் வாசகம் வருமாறு:[1]


  1. கமால் Dr. S.M. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)