பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

65

அதனையடுத்த 100 ஆண்டுகள் கழித்து அந்தப் பெரியார் அணைத்திட்டம் ஆங்கில ஆட்சியில் உருப்பெற்றது.

இந்த மன்னரது ஆட்சி விறுவிறுப்புடன் நடைபெறத் துவங்கியது. இராமநாதபுரத்தை அடுத்துள்ள திருப்புல்லாணியில் ஒரு சிறிய கோட்டை அமைத்து கிழக்குக் கடற்கரையோரப் பகுதியின் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். அப்பொழுது சேது நாட்டில் வணிகத்துறையில் ஈடுபட்டிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்ததால் அவர்கள் மூலம் இராமநாதபுரத்திற்கு கிழக்கே பீரங்கி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். இவ்விதம் ஆற்காடு நவாபுடனும் அவரது உதவியாட்களாகிய ஆங்கிலக் கும்பெனியாரையும் அடியோடு சேது மண்ணிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்தார். தளபதி மார்ட்டின்ஸ் ஆற்காட்டு நவாபிற்கும் கும்பெனி கவர்னருக்கும் இரகசிய அறிக்கைகளை அனுப்பி வந்தார்.

இதற்கிடையில் அப்பொழுது சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்தை இராணி வேலுநாச்சியாருக்குப் பிரதிநிதியாக நேரடியாகக் கவனித்து வந்த மருது சகோதரர்கள் சிவகங்கைக்கும் இராமநாதபுரம் சீமைக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த எல்லைப் பிரச்சினைகளைப் பெரிதாக்கி இராமநாதபுரம் சீமைக் குடிமக்களுக்குப் பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி வந்தனர். மேலும் அப்பொழுது சிவகங்கைச் சீமைக்குச் சொந்தமாயிருந்த தொண்டித் துறைமுகத்தின் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இராமநாதபுரம் சீமைக்குச் சொந்தமான திருவாடானைச் சுங்கச் சாவடி வழியாகச் சிவகங்கைச் சீமைக்குக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இராமநாதபுரம் மன்னருக்கு இந்த வகையில் செலுத்தப்பட வேண்டிய ரூ. 15,000/-ஐயும் மருது சேர்வைக்காரர்கள் செலுத்தாமல் அலைக்கழிவு செய்து வந்தனர். இதனால் கோபமுற்ற சேது மன்னர் திருநெல்வேலியிலிருந்து இராமநாதபுரம் சீமை, அருப்புக்கோட்டை, திருச்சுழி வழியாக பார்த்திபனூர் சுங்கச் சாவடியைக் கடந்து சிவகங்கை செல்லும் வரத்து வண்டிகள் அந்தச் சுங்கச் சாவடிக்கு வரி செலுத்தாமல் கிழக்கே, இராமநாதபுரம் வந்து வடக்கே சோழச் சீமைக்குச் செல்லுமாறு ஏற்பாடு செய்தார். இதனால் சிவகங்கைச் சீமைக்கு ஏற்பட்ட வருமான இழப்பை உணர்ந்த சிவகங்கைப் பிரதானிகள் வைகையாற்றிலிருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக தெற்கே அபிராமம் முதலிய கண்மாய்களுக்குச் செல்லும் நீர்வரத்தைத் தடை செய்தனர். இதனால் கோபமுற்ற சேதுபதி மன்னர் அபிராமம் சென்று அந்தக் கண்மாய்க்கு வரும் கால்களின் தடைகளை நீக்கி, நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். இதனை அடுத்து இரு சீமைகளுக்கும் இடையில் பகையுணர்வும்சே - 5