பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

85

அறிவதும் அவர்களது வழக்கம். முத்து விஜய ரெகுநாத சேதுபதி முன்னர் பண்டிதர் ஒருவர் அமர்ந்து இராமாயண ஏடு ஒன்றினைப் பிடித்தவாறு மன்னருக்கு விளக்கம் சொல்லும் சித்திரம் ஒன்று இராமலிங்க விலாச அரண்மனைச் சுவரோவியங்களில் காணப்படுவது இங்கு குறிப்பிடத் தக்கது.

7. இராமநாதபுரம் அரண்மனை அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பொழுது தான் குடிமக்களது குறைகளைக் கேட்டு அறியும் நடைமுறை இருந்து வந்தது. பிற சமயங்களில் மன்னரைத் தொடர்புகொள்ள வேண்டும் எனில் அவரது கார்வார் என்ற அலுவலரைத்தான் அணுக வேண்டும். அரண்மனையில் கீழ் நிலையில் சேவகர்கள் சோப்தார், ரிசல்தார், ஜமேதார் போன்ற பணியாளர்கள் அனைவருக்கும் அரண்மனையின் நிர்வாகத்திற்கும் கார்வார் மட்டுமே பொறுப்பானவர்.

8. இதனைப் போன்றே அரண்மனை அந்தப்புரத்தில் பெண்கள் பலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அந்தப்புரத்தில் மன்னரையோ அல்லது மகாராணியையோ நேரடியாக தொடர்பு கொள்ளுதல் தடுக்கப்பட்டிருந்தது. மன்னர் அல்லது ராணிக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளை அவர்கள் தங்களது தலைவியாகிய தானாவதி என்ற பெண் மூலமாகத்தான் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு.

9. அரண்மனைக்கு வருகின்ற அரசு விருந்தாளிகளான தமிழ்ப் புலவர்கள், வடமொழிப் பண்டிதர்கள் பெரும் வணிகர்கள். பிற நாட்டு அலுவலர்கள் ஆகியோர் திரும்பிச் செல்லும்பொழுது மன்னரைச் சந்தித்து அரண்மனை மரியாதையைப் பெற்றுச் செல்லுதல் வேண்டும். அவர்களுக்குத் தேவையான வழிச் செலவுக்கான பணம், பட்டாடைகள் மற்றும் பொன் வெள்ளியிலான தட்டில் வைத்து வழங்கப்படும்.

10. இராமநாதபுரம் அரண்மனையின் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட்ட முறை ‘பாரி’ எனப்படும். இந்த முறை தன்னரசு மன்னர்கள் காலத்திலிருந்து ஜமீன்தார்கள் காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது இராமநாதபுரம் கோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அரண்மனைப் பாதுகாப்பிற்கென இரண்டு தனிக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழுவில் சில வீரர்களும் தீ வெட்டி தூக்கிச் செல்பவர்களும், தாரை தப்பட்டை ஆகியவைகளை அடித்து முழக்குபவர்களும் வாங்கா என அழைக்கப்படும் வளைந்த புனலை ஊதுபவர்களும் இருந்தனர். முதலாவது குழு சரியாக நடுநிசி நேரம்